டாண்...டாண்...டாண்...டாண்...
பள்ளிமணி அடித்தவுடன் பையை எடுத்தான்
பட்டென்று வகுப்பறையின் வாசல் கடந்தான்
துள்ளித்துள்ளி வேகமாக வெளியில் வந்தான்
வெள்ளைநிற புத்தகப்பை பின்னால் வைத்தான்
விடுவிடுவென வீட்டைநோக்கி விரைந்து சென்றான்
உள்வீட்டின் நடையதனில் பையை எறிந்தான்
ஓர்மடக்கில் தாய்தந்த பாலைக் குடித்தான்!
பால்வழியும் உதடுகளைத் துடைத்துக் கொண்டான்
பந்துடனே மட்டையையும் எடுத்துச் சென்றான்
கால்பந்து மைதானத்தின் அருகே உள்ள
காலியிடத்தில் கிரிக்கெட் குச்சிகள் நட்டான்
வேல்முருகன் அதிவேக பந்து வீச
வேகமாக ஆறும்நாலும் விளாசி அடித்தான்
மெல்லிருட்டு எட்டிப் பார்க்க ஆட்டம் முடித்தான்
மின்னலென வீட்டிற்குத் திரும்பிப் போனான்!
கைகால்கள் முகங்கழுவி புத்தகம் பிரித்தான்
கருத்தாக அன்றையதின பாடம் படித்தான்
அகமலர்ந்து அன்னையிட்ட சோற்றை உண்டான்
அப்பாவுடன் தொலைக்காட்சி சேர்ந்து பார்த்தான்
முகமலர்ந்து பாட்டிசொன்ன கதைகள் கேட்டான்
மூதுரைகள் அர்த்தங்கள் விளங்கிக் கொண்டான்
சுகமில்லா தாத்தாவிற்கு மருந்து தந்தான்
சோர்ந்திருந்த கைகால்கள் பிடித்து விட்டான்!
எடுத்தருந்த தாகத்திற்கு தண்ணீர்ச் சொம்பு
எதிரிலிருந்த நாற்காலியில் வைத்த பின்பு
படுக்கைக்குச் செல்லென்று அம்மா சொல்ல
பக்கத்துக்கு கழிவறையில் சிறுநீர்க் கழித்து
மூடியுள்ள குழாய்திறந்து பாதம் நனைத்தான்
முன்னறையில் உள்ளதொரு கட்டிலில் படுத்தான்
படுத்தவுடன் உறங்கிப்பின் புரண்டு படுக்க
பாதம்பட்டு நீர்ச்சொம்பு விழுந்த ஓசை .......
டாண்...டாண்...டாண்...டாண்...
டாண்...டாண்...டாண்...டாண்...
டாண்...டாண்...டாண்...டாண்...
வெ. நாதமணி,
06/08/2013.