மீண்டும் இளமையின் சொர்க்கம்!..

அதிகாலையில் எழுந்து
பல்துளக்கி படித்து
குளிர்ந்த நீர்க்குளத்தில்
குளித்து நீந்தி இன்புற்று
பழயசோறும் ஊறுகாயும்
பசிக்கு உண்டு
தோசையோ இட்லியோ
மதியத்திற்கு எடுத்துக்கொண்டு
ஓட்டமும் நடையுமாய்
பள்ளிசெல்லும் காலமது..

ஒற்றையடி பாதையெங்கும்
கரும்புக்காடு தொடர்ந்திருக்கும்!
இடையிலோர் தோப்பிருக்கும்
குயில்கூவி அழைத்திருக்கும்!
ஓங்கி உயர்ந்த தென்னைகளில்
குலைகுலையாய் தேங்காய்கள்!
பாரம் தாங்காது
மரம் காற்றில் அசைந்திருக்கும்!
குட்டையும் நெட்டையுமாய்
மரங்கள் அடர்ந்திருக்கும்!
பசும் போர்வைக்குள்
பறவைகள் அமர்ந்திருக்கும்!
சலசலப்பு கேட்டிடவே
சிலிர்த்தெழுந்து ஓடிடுமே..

கண்ணுக்கெட்டும் தூரம்வரை
வயல்வெளிகள் பரந்திருக்கும்!
வாய்க்கால் வரப்புவரை
நீர் நிறைதிருக்கும்!
நாற்றுகள் பசுமைபிடிக்கும்
கண்ணுக்குள் குளுமையடிக்கும்!
வளர்பயிரின் வாசமடிக்கும்
வழிகடந்தும் நெஞ்சிலிருக்கும்..

பசுமையோடு பயணித்து
பள்ளிக்கு சென்றிடுவோம்
பாடங்களில் தமிழினிக்கும்!
ஆசிரியர் குரலிலோ
கம்பீரம் கலந்திருக்கும்!
குறும்புகள் பலவும்செய்து
பிரம்புகள் பிய்த்திடுவோம்!
வம்புகள் சிலசெய்து
வசைகளை வாங்கிக்கொள்வோம்!
பாடங்கள் முடிந்திடவே
வீட்டுக்கு விரைந்திடுவோம்..

அந்திநேர ஆகாயம்
ஆனந்த வெல்லம்பாய்ச்சும்!
செம்மை தகதகக்க
சூரியன் அடங்கிடுவான்!
பச்சைபசும் காடெங்கும்
பொன்னொளி கலந்திருக்கும்!
காணும் காட்சியெல்லாம்
இயற்கை அலங்கரிக்கும்!
என் இளமைக் காலமெல்லாம்
இதயக் கூட்டுக்குள்
இனிமைக் காலமாக..

இன்றைய நிலையோ
இடியென இறங்குது!
மழையில்லை நீரில்லை!
மண்ணில் வளமில்லை!
காய்ந்து கிடக்கும்
குட்டைகள் வாய்பிளக்கும்!
வயல் வரப்பெல்லாம்
கட்டிடங்கள் விளைந்துநிர்க்கும்!
காலத்தின் கோலம்கண்டு
நெஞ்சம் குமுறுதையா!
விவசாய கூட்டம்
விழிபிதுங்கி நிற்குதையா!
பஞ்சம் பிழைக்க
பல ஊர்கள் போகுதையா!
மீண்டும் வாராதா?....
சொர்க்கத்தின் வாசல்கள்!
மீட்டு வருவீரோ?
மீண்டும் சொர்க்கம் தருவீரோ?..

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (7-Aug-13, 5:20 pm)
பார்வை : 109

மேலே