தென்றல்விடு தூது!

தென் திசை தென்றலே
தேன் சுமந்து சீதனமோ!
தமிழவளைக் காணவே.
தனியாகப் பயணமோ!.
வட திசை நோக்கியே
வழக்கமான உலாவோ!
பொதிகை மலை புறப்பட்டு.
போகும் வழி தூரமோ!

அகத்திய முனிவரவர்
ஆசிரமச் சேவகனோ!
இகத்தினில் தழிழ் தந்த
இறைவனின் ஏவலனோ!
சுகம் தரப் பிறந்த நீ
சுரந்து வரும் ஆவலனோ!
யுகநலமாய் தமிழுக்கு
உகந்த சுகக் காவலனோ!

தாமிரபரணி ஆற்றில்
தலை மூழ்கிக் குளித்துமே
தேமதுர தமிழ் அணங்கை
தேடி நீயும் செல்வாயோ!
குற்றாலச் சாரலிலே
குளிர்ந்து நீயும் சுகமாக
அருவியெலாம் நீராடி
அப்புறமே தொடர்வாயோ!

நெல்லையில் அல்வாவும்
நீ வாங்க மறப்பாயோ!
எல்லையில் காந்திமதி
இறங்கி நீ தொழுவாயோ!
நெல்வயல் நீண்டவழி
நெடும் பயணம் கடந்துமே
செல்வனவன் செந்தூரான்
சேவடிகள் தரிசனமோ!

அலைவாயில் கடலாடி
ஆண்டவனை கலந்தாடி
அங்கிருந்தே குமரியவள்
தங்கவொளி சேவிப்போ!
செங்கதிரோன் தங்கியே
தூங்கியெழும் காட்சியோ
பொங்கும் நல் புத்துணர்வோ!
அங்கந் துள் அகமகிழ்வோ!

உவரி வந்து மாதாவை
உளங்கனிந்து செபித்துமே
காயல் பட்டண தர்காவிலே
காலாற்றி தொழுதுவிட்டு
வெற்றிலைத்தோட்டங்களை
சுற்றியும் சுவை மணந்து
முற்றிய பலா வாழை மா
பற்றி உடன் கொண்டு வா!

ஆழக்கடல் தூத்துக்குடி
ஆழத்தில் முத்தெடுத்து
ஈழக்கடல் வீரத்தமிழ்
ஏந்தி நீ முத்தாடி
வாழுந்தமிழ் சிதம்ரனார்
விட்ட கப்பல் தடம் பார்த்து
கீழக்கரை மீனவரை
கண்டு காயம் ஆற்றி வா!

பாதையெலாம் உப்பளங்கள்
பரவியே பளபளக்கும்.
வேதனையில் தொழிலாளர்
வெந்து புண்ணில் வருந்துவர்.
ஊதியே புண்ணாற்றி
உழைப்பவரை தேற்றியே
நாதியாய் நீ அவர்க்கு
நல்லூக்கம் ஊட்டி வா!

வரும் வழி மணியாச்சி
வாஞ்சியவன் முருக்காச்சி.
கடம்பூரு போலி வாங்கி
கடந்து வா கொல்லநகர்.
கொல்லம்பரம்பு நல்ல நீர்
குடிக்க சுவை வெல்ல நீர்.
குறுக்குச்சாலை சேவு திண்ணு
குடித்துப்பார் வாய் மணக்கும்.

சுற்றியுள்ள ஊரெல்லாம்
சுதந்திர விளை பூமி.
பற்றி வா தேசப்பற்று
பரப்பியே தேசமெல்லாம்.
பாஞ்சாலம் ஓட்டப்பிடாரம்
பக்கமே எட்டையபுரம்
வ.உசி கட்டபொம்மன்
வாழும் பாரதி அறிந்து வா!

கர்மவீர்ர் காமராசர்
கண்ட ஊர் விருதுநகர்.
பரம ஏழை பாதம் தொட்ட
பழைய மண் எடுத்து வா!
தென் தமிழ் நாடெல்லாம்
தேடித்தேடிக் கண்டு வா!
சுதந்திர சுவாசமாய்
சுத்தமாகி பரந்து வா!

பக்கம்தான் மதுரையும்
பழம் தமிழ் சங்கத்தூர்.
நிற்குமே நாவில் சுவை
நிற மல்லி இட்லி துவை.
திக்கெல்லாம் கோபுரங்கள்
தேவிமீனாள் மகிமைகள்.
சொக்கனாதன் தடாகத்தை
உக்கி போட்டு மூழ்கி வா!

நாடெல்லாம் சுற்றி நீ
காடெல்லாம் அளந்து வா!
போதுமோ சுற்றுச்சூழல்!
பூமியிது வாழ்வதற்கு!
எதிர் காலம் என்னாகும்
என்பதை ஆய்ந்து சொல்
பொன்மழை என்னவளை
புத்திமதி சொல்லி வா!


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (9-Aug-13, 9:23 am)
பார்வை : 504

மேலே