சந்தேகம்

சந்தேகமது புகுந்த நெஞ்சில்
சந்தோசங்கள் நிலைப்பதில்லை!
அன்பு கொண்ட உள்ளத்திற்குள்
அழுக்கிற்கென்றும் இடமில்லை!

புரிதல் இல்லா வாழ்வின் நடுவே
புன்னகைக்கென்றும் வேலையில்லை!
பூசல் நிறைந்த வீட்டில் மட்டும்
பூச்செடிகளும் பூப்பதில்லை!

உண்மையான அன்பையென்றும்
உரசிப் பார்த்தல் முறையில்லை!
உள்ளமென்பது ஊனம் கண்டால்
உலகில் எங்கும் மருந்தில்லை!

பிரிவு என்பது நேர்ந்தபின்பு
பிழை உணர்வதில் பயனில்லை!
கரம் பிடித்த துணையின் மனதில்
கறை தேடுதல் பண்பில்லை!

குதர்க்க சிந்தனைக் குதிரையை வளர்த்தால்
கட்டிப்போட ஒரு கயிறில்லை!
நம்பிக்கையென்னும் நரம்புகள் அறுந்தால்
உறவுகளுக்குள் உயிரில்லை!

காண்பது கேட்பது கருதுவதெல்லாம்
உள்ளபடியே உண்மையில்லை!
காணும் கண்களில் களங்கம் இருந்தால்
கற்கண்டில்கூட வெண்மையில்லை!

சந்தேகம் என்பது செந்தீயைப் போல
பற்றினால் எளிதில் அணைவதில்லை!
நம்பிக்கை என்னும் நன்னீர் தவிர
வேறெது ஊற்றினும் தணிவதில்லை!

குற்றம் காணத் துடிக்கும் மனதை
குரங்கு என்றால் மிகையில்லை!
குறுக்குச் சிந்தனை குருதியில் கலந்தால்
குடும்பத்திற்குள் மகிழ்வில்லை!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (13-Aug-13, 6:12 pm)
பார்வை : 107

மேலே