இராமன் முதலியோர் சடாயுவைக் கண்டது - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

நடந்தனர் காவதம் பலவும்; நல்நதி
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே! 1 - சடாயு காண் படலம், ஆரணிய காண்டம்

பொருளுரை:

(இராமன் முதலிய மூவரும்) பல காத வழியும் நடந்தவர்களாய் இடையே ஓடும் சிறந்த ஆறுகளையும்;
ஆங்காங்கே நிலைபெற்றனவாயும் உறவுள்ளன போலத் தொடர்ச்சியாக வுள்ளனவுமான மலைகளும் நெருங்கியிருந்தன; இத்தகைய மலைகள் சூழ்ந்திருந்த காடுகளையும் தாண்டிச் சென்றனர்; சடாயு எனும் கழுகரசனைப் பார்த்தனர்!

காவதம் - காதம். கிடந்தன - படுத்திருந்தன எனக் கூறும் வகையில் நீண்டு விளங்கின என்றும் உரைப்பர். நின்றன என்பது தனித் தனியாய் இருந்த மலைகள். தொடர்ந்தன என்பது மலைத் தொடர்ச்சிகள்.
நல்நதி -
புண்ணிய ஆறுகள் என்றும் ஆம்.

எழுதியவர் : கம்பர் (22-Nov-24, 4:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே