இறைவன் அளித்த எடைக்கருவி

இறைவன் அளித்த எடைக்கருவி

என் பெயர் ஸ்தாணுமாலையன் சுருக்கமாக எல்லோரும் ஸ்டான் (Stan)என்று அழைப்பார்கள். நான் மும்பை நகரில் படித்து ஒரு வேலையில் சேர்ந்து அங்கு ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தேன். நான் வேலைக்கு சேர்ந்த கம்பெனி ஆரம்பித்து சில வருடங்களே ஆகி இருந்தது. அந்த கம்பெனியில் சினிமா படம் ஓட்டும் ப்ரொஜெக்டர் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு உபயோகம் செய்யும் திரையில் பெரியதாக தெரியவைக்கும் கருவிகள் மற்றும் திரை அரங்குகளில் வைக்கும் ஒலிபெருக்கிகள் டேப்ரெக்கார்டர் என பலவகை பொருள்களை உற்பத்தி செய்து அதை இந்தியாவில் எல்லா இடங்களிலும் விற்பனை செய்யும் ஆவலோடு முதலாளி அதைத் தொடங்கினார். அவர் என்னிடம் ஒரு பெரிய பொறுப்பை அதாவது கம்பெனியின் வளர்ச்சிக்கு என்ன தேவையோ அதை செய்யும் படியும் அதற்கு வேண்டிய பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கு உண்டான வகையில் ஒரு கடிதத்தையும் எனக்கு அளித்து என்னை ஒரு உன்னத நிலையில் வைத்திருந்தார். அதனால் நான் வேலை செய்யும் கம்பெனியை என்னுடையதாகவே கருதி நேரம் பார்க்காமல் உழைத்தேன். அதன் பலன் சில வருடங்களில் தெரிந்தது. கம்பெனி லாபமானதாகவும் மார்க்கெட்டில் நல்ல பெயருடனும் திகழ்ந்தது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் எங்கள் பொருள்களுக்கு மிக்க வரவேற்பு இருந்தது. என் முதலாளி என்னை அவரது பிள்ளைகளுக்கு மேலாக நேசித்தார்.அடிக்கடி என்னிடம் நான் வாழும் இந்த வாழ்க்கை நீ கொடுத்ததுதான் என்று கூறுவார்.
ஒரு வருடமாக என்னுடைய நேரம் சரியாக இல்லை என்று சொல்லவேண்டும். நான் வேலை செய்த இடத்தில் பலரை நிதி நிலைமையைக் கருதி நீக்க வேண்டிய நிர்பந்தம் வந்துள்ளது என முதலாளி கூறிட நான் அவரிடம் அவர்கள் செய்த வேலைகளையும் அதனால் கம்பெனிக்கு ஏற்பட்ட லாபத்தையும் நல்ல பெயரையும் அவரிடம் எடுத்து கூறி அவர்களை வேலையில் இருந்து நீக்கினால் கம்பெனிக்கு நிதி நிலமை மேலும் மோசமடையும் என விளக்கி வேலை இல்லாமல் அவர்களின் வாழ்க்கை மிகவும் துக்கம் அடையும் தயவு செய்து அதை செய்ய வேண்டாம் என நான் கூறிட அவர் உடனே சரி அப்போ நீ வேலையை
விட்டு விலகி விடு உனக்கு நான் கொடுக்கும் சம்பளப் பணம் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க உதவி செய்யும் என அவர் கூறியவுடன் எனக்கு உள்ளத்தில் ஒரு பெரிய அதிர்ச்சி,என் காதில் நான் கேட்டது சரியா என என்னால் நம்பமுடியவில்லை. பதினைந்து வருடங்கள் இந்த முதலாளியிடம் அவர் கம்பெனியின் வளர்ச்சிக்காக எவ்வளவு செய்திருக்கிறேன் இன்று அவர் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் நான் என்று அவரே எவ்வளவு முறை என்னிடம் கூறியிருக்கிறார். என்னைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டு என் திறமையை பாராட்டிய இவரா இவ்வாறு கூறினார் என்ற ஷாக்கில் என்னால் ஏதும் கூற முடியாமல் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தேன். என்ன செய்வது என அறியாமல் என்னுடன் வேலை செய்தவர்களையும் பார்க்க மனமில்லாமல் வெளியே வந்து மும்பை பேருந்தில் பயணம் செய்து நான் தங்கி இருந்த கட்டிடத்திற்கு பஸ் நிலையத்தில் இருந்து நடந்தேன். நான் வேலை செய்யும் வேளையில் பலரும் என்னை அவர்கள் கம்பெனிக்கு அழைத்தார்கள் அவர்களை எல்லாம் மீண்டும் அழைத்து அவர்களிடம் வேலைக்கு செல்லலாம் என்று என் ஒரு மனது கூறியது ஆயினும் இன்னொரு எண்ணம் அங்கு சேர்ந்தால் நான் இது நாள் வரை வேலையில் இருந்த கம்பெனியின் பொருள்களின் விற்பனை தடைப்படும் அதற்கு வரும் வருமானமும் குறைந்து விடும் இது நம்பிக்கை த்ரோகமல்லவா நீ இதுநாள் வரை வாழ்ந்தது அவர் கொடுத்த பணத்தில் அல்லவா என அது வினவ எனக்கு மனதில் குழப்பம் அதிகரித்தது. ஆண்டவனை வேண்டி ஏன் இந்த கொடுமை நான் யாரையும் ஏமாற்றவில்லையே என நினைத்தவாறு என் வீட்டிற்க்குள் நுழைந்தேன். நாட்கள் மாதங்களாகின நான் வெளியே வராமல் யாருடனும் பேசாமல் வீட்டிலேயே அடை டிந்து ந்து கிடந்தேன். யாரையும் பார்த்து பேச மனமில்லை மனதில் உள்ளவற்றை கூற அவர்கள் என்னை கண்டு எள்ளி நகையாடுவார்களோ என ஒரு பயம். என் தாய் தந்தையரை நினைத்து நீங்கள் என்னுடன் இப்பொழுது இருந்தால் என் துயரத்திற்கு ஒரு விடிவு கிடைத்திருக்குமே என எண்ணுகையில் என் கண்கள் குளமாகின. இறைவன் ஏன் என்னை படைத்து ஏற்றத்தையும் தாழ்வையும் கொடுக்கிறான். உலகில் நாம் பார்ப்பவர்கள் பலரும் உன்னதநிலையிலும் தாழ்ந்தநிலையிலும் உள்ளனரே கடவுளே ஏன் இப்படி படைத்தாய் என அவரை நிந்தனை செய்ய முற்பட்டேன். பணவுள்ளவர்கள் எல்லாம் இருந்தும் ஒரு வேளை சாப்பாடுகூட சாப்பிட முடியாமல் வியாதியுடன் வாழ்கிறார்கள். பணமில்லாமல் அதை சம்பாதிக்க வழியும் தெரியாமல் பலர் ஏழைகளாக இருந்து ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாமல் தவிக்கிறார்கள் என்ன கொடுமை இது என இறைவனைக் கடிந்து கொண்டேன். இவ்வாறு சில மாதங்கள் நகர்ந்தன. இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்ட எனக்கு இந்த பாகுபாட்டினால் சிறிது வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. அவன் இருக்கிறானா என்ற கேள்வி
பலநேரம் என் மனதைக் கலங்க வைத்தது. இறைவனை எப்பொழுதாவது சந்திக்க நேர்ந்தால் அவனிடம் பல கேள்விகள் அவரைக் கேட்க வேண்டும் என மனதில் நினைத்தேன்.
காலிங்பெல் சத்தம்கேட்டு கதவு திறந்தேன். இறைவன் நின்றிருந்தார். உலகின் மதங்கள் கூறும் எவ்வித அடையாளங்களும் அவரிடம் காணப்படவில்லை. ஆனால் அவர் இறைவன் தானென்று எனக்குள் ஏதோ ஒன்று உறுதியாகக்கூறியது. உள்ளே வரச்சொல்ல வெட்கத்துடன் மறுத்தார். கொஞ்சம் வற்புறுத்தியபின்பு தான் வீட்டிற்குள் வந்தார். சோபா சற்று அழுக்காகயிருப்பதால் சேர் தரவா என்று கேட்டேன். இருக்கட்டும் பரவாயில்லை என்று அதிலேயே உட்கார்ந்துகொண்டார்.
எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் இருந்தது. ஒரு வாரமாக இறைவனைத் திட்டிக்கொண்டிருந்தேன். ஆனால் அவரோ நேராக வீட்டிற்கே வந்து உட்கார்ந்திருக்கிறார். உள்ளிருந்து வெந்நீர் கொண்டுவந்து கொடுத்தேன். வெயில் அதிகமென்று குளிர் சாதன பெட்டி இருக்கிறதே ஐஸ் வாட்டர் கொடுங்கள் என்றார். நான் ஐஸ் வாட்டர் குடிப்பதில்லை. கொஞ்சம் மன்னிக்கச் சொல்லிவிட்டு அவருக்காக ஒரு பாட்டில் நிரப்பி ப்ரீஸரில் வைத்தேன்.

இறைவன் கொஞ்சம் கழிவறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டார். இறைவனுக்கு இல்லாததா ? அனுமதித்தேன். அப்படியே குளியலறை சென்று கைகால் முகமெல்லாம் வாஷ் செய்து பிரஷ்ஷாக வந்து உட்கார்ந்தார். நான் கொடுத்த ஐஸ்வாட்டரை ஆர்வத்துடன் குடித்தார். பின்பு நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

"நீ என்னை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய் தம்பி. புரியவைக்கலாம் என்றுதான் வந்தேன்" என்றார். அவர் கொண்டுவந்திருந்த தோள்பையினுள் கைவிட்டு அந்த பொருளை வெளியிலெடுத்தார். பழைய டேப் ரெக்கார்டர் போலிருந்தது அது. டிஜிட்டல் மானிட்டரும் ஒரு தட்டும் அதிலிருந்தன.

"என்ன அது"? என்றேன்

"பயப்படாதே இது ஒரு தராசுதான். இதில் நீ விரும்பும் எல்லாவற்றையும் எடைபோடலாம்"

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. " என்ன, இந்தச்சிறிய தராசில் எப்படி எல்லாவற்றையும் எடைபோட முடியும்"? என்று கேட்டேன்.

அவர் கொஞ்சம் சீரியஸான முகத்துடன் கூறினார்.
"இதிலிருக்கும் இந்த கருப்பு பட்டனை அழுத்தியதும் நீ எடைபோட விரும்பும் பொருள் இந்தத்தட்டின் அளவிற்கு சின்னதாகி விடும்"
"சரி இதை எதற்காக என்னிடம் தருகிறீர்கள் ? நான் என்ன செய்யவேண்டும்"?
" மிகச்சுலபம். இதைக்கொண்டு உன் விருப்பம்போல அனைத்தையும் எடைபோட்டுவிட்டு, எது எது என்னன்ன எடையில் இருக்கிறதென்று ஒரு டைரியில் குறித்துவைத்துக்கொள். நான் அடுத்தவாரம் வருகிறேன்" என்று எழுந்துகொண்டார்.

எனக்கு மெல்ல புரிந்தது. ஒரு வாரமாக அவரை நான் திட்டியது அவரை காயப்படுத்தியிருக்கவேண்டும். எதற்காக இந்த உலகை இப்படி ஏற்ற இறக்கங்களுடன் படைத்திருக்கிறாய் ? ஒருபக்கம் மிதமிஞ்சிய உணவு கொடுக்கிறாய் அவர்கள் வியாதிவந்து சாப்பிடமுடியாமல் இருக்கிறார்கள். பின்னர் அதே வியாதி முற்றி இறக்கிறார்கள். மற்றொருபக்கம் உணவிற்கே வழியின்றி பசியால் பல நாட்கள் வாடி கடைசியில் சாகிறார்கள். எதற்கு இந்த பாரபட்சம் ? என்றெல்லாம் கம்யூனிசத்தனமாக நான் திட்டியதால் அவர் எனக்கு எதையோ உணர்த்த விரும்புகிறாரென்று புரிந்துகொண்டேன்.
"ஒரு மிகமுக்கியமான விஷயம். மறக்காமல் எடைபோட்டபின் தட்டிலிருந்து இறக்கிவிடு. ஐந்து நிமிடங்களுக்குமேல் தாமதித்தால் நீ எடைபோடும் பொருள் அதே சிறிய உருவத்திலேயே நிலைத்துவிடும்" என்ற எச்சரிக்கையை வைத்துவிட்டுக்கிளம்பினார். அவர் சென்றபின் அந்தத் தராசை எடுத்துக்கொண்டு கதவைச்சாத்திவிட்டு கிளம்பினேன். எங்கள் அடுக்கு மாடி கட்டடத்தின் செக்யூரிட்டி அருகே சென்று தராசிலிருந்த பட்டனை அழுத்தினேன். சட்டென்று அவர் ஒரு விளையாட்டுப் பொம்மைபோல சிறியதாகி விட்டான் . சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்து விட்டு அவனை எடைபோட்டேன். பாக்கெட் டைரியில் அவர் எடையைக் குறித்துக்கொண்டபின்பு பொம்மைபோன்ற தோற்றமுள்ள செக்யூரிட்டியை எடுத்து வெளியில் வைத்தேன் பழைய உருவத்திற்கு திரும்பினான்.
நடந்தது எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல என்னைப்பார்த்து ஒரு சல்யூட்டை வைத்தான் . ஓ இவ்வளவுதான் விஷயமா என்று எண்ணியபடி நடக்க தொடங்கினேன்..
வழியில் தென்பட்டப் பலரையும் அதேவிதமாக எடைபோட்டேன். ஒரு சேல்ஸ் ரெப், கீரைக்காரப்பாட்டி, டீக்கடை மாஸ்டர், மளிகைக்கடைக்காரர், பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள், சாக்கடை ஊழியர், பென்ஸ் காரில் இறங்கி யாருடனோ போன் பேசிக்கொண்டிருந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்த நின்ற இளைஞன், சல்வார் போட்டு வண்டி நின்றதும் இறங்கிய ஒரு இளம் பெண் என்று ஒருவர்விடாமல் எல்லோரையும் எடைபோட்டு டைரியில் குறித்துவைத்துக்கொண்டேன். ஆடு மாடு கோழி நாய் கழுதை என்று விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. டைரியில் இடம்போதாமையால் எடைபோடுவதை நிறுத்திக்கொண்டேன். அன்றிரவு முழுக்க உறக்கமில்லை. இறைவனின் வருகைக்காகக் காத்திருந்தேன். என் அதிர்ஷ்டம் இறைவன் அடுத்த நாளே வந்துவிட்டார். இம்முறை முன் யோசனையுடன் குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்த ஐஸ் வாட்டரை அவரிடம் நீட்டியதும் மகிழ்ச்சியுடம் வாங்கிக்குடித்தார். பிறகு சிரித்தபடியே கேட்டார்.
"என்ன நான் சொன்ன படி எடை போட்டாயா என்னாயிற்று"?
" நான் அவரிடம் எடை போட்டு விட்டேன் ஆனா அதில் என்ன ஆச்சரியம் என்றால் எல்லாமே ஒரே சமமான எடை தான் காட்டியது மனிதன் விலங்குகள் மற்றும் சில பொருள்கள் எல்லாமே ஒரே எடையை காட்டியது என நான் கூற, இறைவன் குழந்தையைப் போல கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தார்.
"பார்த்தாயா அதனால்தான் உன் கையில் தராசைக் கொடுத்து எடை போடச் சொன்னேன். நானாக நின்று நான் படைத்தபோது சமமாகத்தான் படைத்தேன் என்று கூறி இருந்தால் நீ ஒப்புக்கொண்டிருப்பாயா"? மாட்டாய் அதனால் தான் உன்னையே எடை போடச் சொன்னேன். நான் அவரைப் பார்த்து என் தலையைக் குனிந்துகொண்டேன். " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா ஆனா நீங்க படைச்சப்ப எல்லாம் சரியாத்தான் இருந்தால் இப்ப இந்த ஏற்றத்தாழ்வெல்லாம் எப்படி உண்டாச்சு "?

" அவர் உடனே அது உங்களுக்கு நீங்களே கேட்டுக்கவேண்டிய கேள்வி. இயற்கையை மாற்றுகிறேன், அதை ஜெயிக்கிறேன்னு நீங்க கிளம்பி நீங்கள் செய்தவை எல்லாம் இங்கே சமமாக இருந்த விஷயங்களை மாற்றி விட்டது . இயற்கையோட வளர்ச்சி ரொம்ப மெதுவானது. இங்க உள்ள எதுவுமே ஒருநாளில் உருவாகவில்லை. ஒவ்வொன்றும் உருவாக கணக்கில்லாத வருடங்கள் ஆகியிருக்கு. ஏன் மனுஷங்களையே இப்போ பார்க்கும் விதமாக உருவாக்க எவ்வளோ காலமாயிருக்குன்னு உனக்குத் தெரியுமா"?
எனக்கு அவர் சொல்வதை கேட்டதும் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. கடவுள் சொல்வதை ஒருபக்கம் ஒப்புக்கொண்டாலும், சிலவற்றை ஏற்றுக்கொள்ள என்னால் இயலவில்லை. ஒருவன் ஏழையாகவும் மற்றொருவன் பணக்காரணாகவும், ஒருவன் அஹிம்சையாளனாகவும் ஒருவன் வன்முறையானவனாகவும் என்று எத்தனைவிதமாக இருக்கிறார்கள். எவ்வளவு பாகுபாடுகள் எவ்வாறு முளைத்தது. மனம் இதை எண்ணி இறைவன் கூறியதை முழுமையாக நம்ப மறுத்தது. இதை அவரிடம் கேட்க வாய் திறக்கும் முன்பே இறைவன் எழுந்துகொண்டார். "சரி நான் கிளம்புகிறேன். ஒரு லட்சம்பேர் என்னை திட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்த நிமிடத்தில் " எனச் சிரித்தார்.
என்னுள் ஒரு ஆசை இந்த இறைவனைச் செல்ல விடாமல் தடுத்து நிமிடம் வைத்து கொண்டு விட்டால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம் என்று நினைத்து
"கடைசியாக ஒரேயொரு உதவி" என்றேன்.
"என்ன வேண்டும் என்றார் "?
" எல்லாவற்றையும் எடைபோட்டாயிற்று. உங்களை மட்டும் விட்டுவைப்பானேன். எப்படி நீங்கள் மட்டும் எல்லாவற்றிலும் உயர்ந்த இறைவனாக இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விருப்பம் என்றேன் "

'அடப் பயித்தியக்கார பயலே ' என்பதுபோல என்னை பாவமாக பார்த்து சிரித்துக் கொண்டே "சரி சரி தராசை எடுத்து வா " என்றார்.

நான் பெட்ரூமிலிருந்து தராசை எடுத்துவந்தேன். பட்டனை அழுத்தியதும் இறைவன் சிறுத்து பொம்மையானார். அவரை எடுத்து தராசுத்தட்டில் வைத்து, தராசைத்தூக்கி அப்படியே கண்ணாடி அலமாரியில் வைத்துவிட்டுக் கதவை மூடினேன். அந்த பொம்மையைப் பார்த்தவாறு இருந்த நான் என்னை மறந்து கண்களை மூடினேன்.
மறுபடி கண்ணைத் திறந்த பொழுது அந்த தராசையும் பொம்மையையும் காணவில்லை.

எழுதியவர் : கே என் ராம் (22-Nov-24, 3:04 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 38

மேலே