தாய்ப்பால் துரோகிக்கு ...
தாய்ப்பால் துரோகிக்கு ...
----------------------------------------------------------------
தோள்களை நகர்த்திவிட்டு - ஊன்ற
கோள்களைத் தந்துவிட்ட
அருமை இந்தியனே.....
உன்னையா நம்புகிறது இந்தத்
தாய் தேசம்.. !!
வளர்த்தத் தாய்க்கு இங்கு
தனிமையைப் பரிசாக்கி ...
அங்கே வளர்ப்பு நாய்க்கு
உன் படுக்கையைத் தாரைவார்த்தவனே ..
உன்னையா நம்புகிறது இந்தத்
தாய் தேசம்.. !!
மரணப் படுக்கையில்
அவள் உன் பெயர் உச்சரிக்க ....
இங்கே மலிவு விலை மதுக்கடையில்
மரணிக்கும் நலிந்த இந்தியனே ...
உன்னையா நம்புகிறது இந்தத்
தாய் தேசம்.. !!
இதற்கு விடை சொல்...
உன் அலைபேசி தாய்ப்பால் தந்ததுண்டா ..?
உன் அறைக் கூண்டில் தொப்புள்கொடி சுகமுண்டா...?
உண்ணும் பன்னாட்டு பண்டங்களில்
தாய்ப்பாசம் சிறிதுண்டா ....?
உன் மடிகணினி தாலாட்டி மணிநேரம் மயங்கியதுண்டா...?
மலர்மஞ்சம் பலகண்டாய், அதில் தாய்மடிக்கு
இணை ஒன்றுண்டா..?
எதை நோக்கி ஓடுகிறாய்...?
இங்கே,
உன் முதல் வார்த்தைக்கு மூலம் தந்தவளின்
கடை வார்த்தைக் கேட்க காதுகள் இல்லை...
உன் அழுகைக்குப் பால் சுரந்தவளின்
சிதைக்குப் பால் வார்க்க கைகள் இல்லை...
பால் துரோகம் புரிந்தவனே...
உன் கால்படும் இந்த பூமியில்
நெருப்பின்றி அமிர்தமா விளைந்திடும்.....???
போ...
அற்ப சில்லறைக்காக,
கற்பை கேட்கும்
கூட்டம் காத்திருக்கிறது....
மேற்கிலிருந்தோ, கிழக்கிலிருந்தோ
ஒரு தீக்குச்சியை விட்டெறி
உன் தாய்மடி தனிமரமாய்
பற்றிஎரியட்டும்....
இமயன் கார்த்திகேயன்
(((
கடந்த சனிக்கிழமை, ஒரு முதியோர் இல்லத்திற்கு நண்பர்களோடு
சென்று எம்மால் இயன்ற உதவிகளை செய்துவிட்டு வந்தோம்....
அதில் என் மனதை பாதித்த சில செய்திகளை வைத்து ஒரு கவிதை (மாதிரி) கிறுக்கினேன்.
உங்கள் கருத்துக்காக...))))