ஒரு இரவு.. பல கனவு..
பூங்காவின் நடுவே
நேற்று தொலைத்த
தன் இளமையை
தேடி திரியும் சருகான மலர்கள்;
பகலெல்லாம் குடையாகி
நிழல் தந்த மரங்கள்
மேகத்தின் சாமரத்தில்
உடல் அசையாமல்
நின்று உறங்கும்;
விழும் முன்
தன் இறுதி மூச்சை
இழுத்து பிடித்து
முடிந்தவரை இலைக்கு
வண்ணம் தீட்டும்
பனித்துளிகள்;
தன் வாலிப அழகை
உலகிற்கு காட்ட
நேரம் பார்த்து
காத்திருக்கும் மொட்டுகள்;
ஏதோ கிசு கிசு சத்தம்
கேட்டு உறக்கம் தொலைக்கும்
பாதி வலையில்
படுத்துறங்கும் சிலந்தி;
இரு பறவைகளின்
அழகிய ஊடல்
கண்டு நாணத்தில்
அங்கும் இங்கும்
உடல் அசைக்கும்
புற்கள்;
அந்த
பறவைகளின் இடையே
அமர இருக்கை
கேட்கும் காற்று;
இதையெல்லாம் கண்டு
தன் இயலாமையை எண்ணி
விடியலுக்கு காத்திருக்கும்
வெண்ணிலவு;
ஒரு இரவு
அதில் பல கனவு
அத்தனையும் அழகு;