பொன்வண்டு

அன்றும்காலை வழக்கம் போல
அலுவலகம் செல்லும் நோக்கில்
நின்றபடி நிலைக்கண் ணாடிமுன்
நிறைவாக முகமே பார்த்து
நன்றாகச் சவரம் செய்ய
நானங்கு முனைந்த போது
வண்டொன்று கழுவும் பீங்கான்
வழவழப்பு தொட்டியில் கண்டேன்!

கருப்பான வண்டின் முதுகில்
கரும்பச்சை மஞ்சள் புள்ளிகள்
அருமையாய் இருந்தது கண்டு
ஆண்டவனின் படைப்பை எண்ணி
பெருமையாக வியந்த வண்ணம்
பெருவண்டை உற்றுப் பார்த்தேன்
கருவண்டோ தொட்டியில் இருந்து
கரையேற முயல்வதைக் கண்டேன்!

தழுவுகின்ற பெண்ணின் கரங்கள்
தளிரைவிட மென்மை என்பர்
விழுந்துவிட்ட வண்டின் கால்கள்
வெண்பஞ்சின் மென்மை எனவே
வழுக்குகின்ற தொட்டியை விட்டு
வந்துவிட இயல வில்லை
எழுந்தும்பின் விழுந்தும் உருண்டும்
எந்தமுயற்சி யும்பல னில்லை!

கைக்கெட்டிய உணவு வாய்முன்
கைதவறி விழுதல் போல
உய்க்கவேண்டி வண்டும் மீண்டும்
ஓயாமல் ஏறிப்பின் தாவி
பக்குவமாய் பலமுறை முயன்றும்
பழையவிடத் திற்கேச் செல்ல
மெய்வருத்தும் வண்டின் முயற்சியில்
மெய்சிலிர்த்து சிலையாய் நின்றேன்!

முயற்சியுடையார் உயர்வே அடைவர்
முயற்சிசெய்தால் முயன்றது கிட்டும்
அயர்ச்சியற்ற முயற்சியின் பயனால்
அந்தவண்டும் மெதுவாய் தொட்டியின்
உயரத்தின் விளிம்பில் வரவும் ..........

காட்சி-1:
உயரத்தின் விளிம்பில் வரவும்
ஓர்நொடிதான் அதனின் இன்பம்
பயமும் அருவெறுப்பும் கொண்டு
பட்டெனத்தட்ட செத்தது வண்டு!

காட்சி-2:
உயரத்தின் விளிம்பில் வரவும்
உள்ளத்தில் நிம்மதி ஓங்க
இயல்பாய்சிறு அட்டை கொண்டு
எடுத்துவண்டை பறக்க விட்டேன்!

வெ. நாதமணி,
17/08/2013.

எழுதியவர் : வெ. நாதமணி (17-Aug-13, 8:22 pm)
பார்வை : 97

மேலே