கலப்பினம்

தவறென்ன நான் செய்தேன்-திரு
நங்கையாய்ப் பிறப்பதற்கு?

பிறப்பை முடிவு செய்யும்
பெரும் பதவி உனக்கிருந்தால்,
உன் நகைப்பு நியாயமே!

ஈருயிராய் நான் பிறந்தது
என் குற்றமென்றால்
இருமனமாய் நீ வாழ்வது
யார் குற்றம்?

சற்றேனும் உன்னை
உற்றுப் பார்!
கன்னியைக் கண்டதும்
காளை நீ
வெட்கியதில்
ஆணில் பெண்ணில்லையா?

அடிமையில்லை
என்று கூவி
ஆணுக்கு நிகர் நானென்று
ஆடைகுறைத்து,
அதிகாரமாய்ப் பேசும்
பெண்ணில் ஆணில்லையா?

உள்ளொன்றும்,
புறமொன்றுமாய்
இருவேடம் புனையாமல்,
இயற்கையை
இயல்பாய்க் காட்டி
இயன்றவரை
இருந்து விட்டுப் போகிறேன்!

'உயிர்'என்று
வாழ்வதற்கு
அன்பென்ற தகுதி போதும்.
ஆணென்றும்,பெண்ணென்றும்
பால் பிரிவு தேவையில்லை!

கலப்பின நாய்க்கும்
கலப்பின காய்க்கும்
உன் மன வீட்டில்
இருக்கும் இடம் கூட
எனக்கில்லையா?

எழுதியவர் : ranibala (21-Aug-13, 11:17 am)
பார்வை : 102

மேலே