இருத்தலில் இரு (படித்ததில் பிடித்தது...)

தரையில் நடப்பதைவிட‌
எளிதாக இருந்தது
கம்பியில் நடப்பது
தெருக்கூத்துக் கலைஞனுக்கு.

கால்கள்
எங்கோ இருந்தபோதும்
கூடிநின்ற கூட்டத்துக்குள்
பசித்திருந்த மனைவியையும் குழந்தையையும்
கண்கள் நோக்கும்.

அவர்கள்
உயிரைக் கொடுத்து
ஒரு
உயிரில்லா இசையை
எழுப்பிக்கொண்டு.

கலைஞனின் கால்களின்
ஒவ்வொரு நரம்பும்
கம்பியைத் தொட்டுக்கொண்டும்
அதனுடன் இடைவிடாது
உரையாடிக்கொண்டும்.

காசுகளின் ஒலியும்
கைதட்டல் ஓசையும்
கேட்கவில்லை
கம்பியும் தானுமாய்
ஒன்றாகிவிட்ட கலைஞனுக்கு.

கலைஞனின் கையில்
சமன்படுத்தும் கோல்
இருந்தது
ஒரு சம்பிரதாயத்துக்காக மட்டும்தான்.

எழுதியவர் : எஸ்.கே.பிரபாகர், ஐ.ஏ.எஸ். (21-Aug-13, 11:37 am)
பார்வை : 88

மேலே