இறவாக்காதல் (இறுதிப்பாகம்)
....இறவாக்காதல்.....
( இறுதிப்பாகம் 12)
தாயாரின் வற்புறுத்தலால் மருத்துவமனைக்கு சென்று, அன்னையின் அன்பான கண்காணிப்பில் படிப்படியாக உடல் தேறினாலும், மனதளவில் கவிதா உடைந்தே இருந்தாள். ஒருவார மருத்துவ விடுப்பு அவளுக்கு கிடைத்தது. அம்மாவும் வருட விடுப்பு எடுத்துக் கொண்டு மகள் அருகிலேயே இருந்தது அவளுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தது. அம்மாவுக்காக அழாமல் நடித்தாலும், இரவு படுக்கையில் கண்ணனின் நினைவில் அவள் அடையும் வேதனை சொல்லில் அடங்காது... சொல்லி மாளாது. அன்று விடிந்ததும், அம்மா அவளை எழுப்பி, உச்சிமுகர்ந்து இனிய பிறந்தநாள் என்று வாழ்த்துகையில்... ஒவ்வொரு வருஷமும் அம்மா வழக்கமாக செய்வதுதான்... "ஓ.. இன்றுதானே கண்ணன் என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார் அம்மா" என்று ஆவலுடன் எழுந்தவளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த தாயின் முகத்தில் தெரிந்த சோகத்தில் தன்னிலைப் புரிந்து.. "அம்மா...இனி கண்ணன் வரவே மாட்டாரா?" என்று அழுத மகளை தன்னோடு சேர்த்தணைத்துக் கண்ணீர் விட்டார் கவிதாவின் தாய். அன்று முழுவதும் இயந்திரமாய் நடமாடிக் கொண்டிருந்தாள். யாரிடமும் வாழ்த்து பெறவிரும்பாமல் அலைபேசியை அணைத்து வைத்திருந்தாள்.
பக்கத்து வீட்டு நாய் ஆக்ரோஷத்துடன் குரைத்த ஒலி கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்த கவிதா.. "தூக்கத்தை தொலைத்து தோட்டத்திற்கு வந்த நான், இவ்வளவு நேரமாக கடந்த கால நினைவுகளில் ஒன்றித்து விட்டேனா'? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். தொடர்வண்டியைப் போல் தொடர்ந்த நினைவுகளின் வேதனையை மறக்க முடியுமா தன்னால்.. கேள்வியுடன் பௌர்ணமியைப் பார்த்தாள். வெண்ணிலவின் ஒளி நேரடியாக அவள் மேல் படர்ந்தது. கண்ணனுடன் கொஞ்சியபடி பேசிய உரையாடல் நினைவிற்கு வந்தது. "கண்ணா.... என் பிறந்த நாளுக்கு என்ன கொடுப்பீர்கள்?" "என்னைக் கொடுப்பேன்".. சீ,, விளையாடாதீர்கள்.. சொல்லுங்க.." "பரிசா... நீ இதுவரை பெற்றிராத, இனிமேலும் உன் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத... இதுவரை யாருக்கும் நான் கொடுத்திராத.. ஒரு உன்னதமான பரிசை உனக்கு கொடுக்கப் போகின்றேன்...." கண்ணன் சிரித்துக்கொண்டே பதிலளித்தான். "அது என்னவென்று இப்போதே சொல்லுங்களேன்..." " காத்திரு.. கண்ணே .. காத்திரு.. காலந்தாழ்த்தாமல் காளையிவன் காற்றாய் பறந்து வந்து, காரிகையிவளை கரங்களில் சிறையெடுத்து கன்னங்கள் சிவக்க..." அவன் சொல்லிக்கொண்டே போகையில் அவள் இடைமறித்து.."போதும் போதும் உங்கள் கவித்திறனை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று சொன்னாலும், அவன் கூற்றின் பொருள் உணர்ந்து நாணத்தில் முகம் சிவந்தாள் அன்று. ஆனால் இன்று அந்த நினைவுகள் தந்த வேதனையில், கரங்களுக்குள் முகம் புதைத்து கேவினாள்.
நாய் குரைத்த ஒலியில், நித்திரை கலைந்து வெளியே வந்த அவள் தாய், மகள் தனியே பனியில் அமர்ந்து அழுதுக்கொண்டிருப்பதைக் கண்ணுற்று, அருகில் வந்தமர்ந்தாள். "கவிமா.. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி அழுதுக் கொண்டிருப்பாய்...? மறந்திடம்மா..." முடியாது என்று உணர்ந்தும் மகளிடம் யாசித்தது தாயுள்ளம். "எதை மறந்திட சொல்றீங்க அம்மா..? அறியாவயதில் கொண்ட நட்பையா... அறிந்த நட்பு காதலாய் மாறியதையா...? காதல் கல்யாணத்தில் இணையப்போகிறது என்று தெரிந்த உரிமையில் அத்துமீறி கற்பனை செய்த இனிமையான தருணங்களையா..? எதை அம்மா என்னால் மறக்கமுடியும்..? தாயாரை எப்போதும் நெருங்கிய தோழியைப் போல் கலந்து பேசிடும் அவள் இன்றும் மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தாள். அவளின் எந்தக் கேள்விக்கும் தன்னிடம் பதிலில்லை என்பதை உணர்ந்த தாய், "காய்ச்சல் கண்ட உடம்பு பனியில் உட்காரவேண்டாம்" என்று கூறி கைத்தாங்கலாக அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றாள். பிரிய மனமில்லாமல் கண்ணனைப் பார்த்த படி.. இல்லை இல்லை.. பௌர்ணமியைப் பார்த்த படி உள்ளே சென்றவளைப் படுக்கையில் படுக்க வைத்து, போர்வையைப் போர்த்திவிட்டு, அறைக்கதவைச் சாத்திவிட்டு சென்றாள் தாய்.
அறைக்கதவு மூடும் ஒலி கேட்டதும் பட்டென்று எழுந்தாள் கவிதா. கவிதைப் புத்தகத்தை எடுத்தாள். பத்திரிகையில் வந்திருந்த கண்ணனின் புகைப்படத்தை கத்தரித்து, புத்தகத்தின் உள்பக்கத்தில் ஒட்டினாள். "என்னைப் பிரிந்ததேன் தென்றலே" என்று கீழே எழுதினாள். படத்தைக் குனிந்து முத்தமிட்டு, பக்கங்களைத் திருப்பி எழுதத் தொடங்கினாள்.
........."கலைந்தது கனவா.... வாழ்வா...?"
உன்னினைவலைகள், கடலலைகளாக
என்னுள் வியாபித்துள்ளது....
என் கருவறைக்கு உயிர் கொடுக்க,
உன் ஒருவனால் தான் முடியும்,
என்ற அசாத்தியமான நம்பிக்கையுடன்
என் கழுத்தில் உன் மாங்கல்யம் ஏறும்
திருநாளுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தேன்,
காத்துக் கிடந்தேன் கண்ணா.....
என்னை உன்னுடையவளாக்கிக் கொள்ள
தாலியும் மாலையுமாக நீ வருவாய் என
வாசலிலே காத்திருந்தேனடா.... ஆனால்,
ஒரு மாலை என் கழுத்தில் அணியுமுன்
ஒரு நூறு மலர் மாலைகள் உன்மேல் அணிவித்து
உயிரற்ற ஜீவனாய் ஊர்க்கோலம் போய்விட்டாயே,
இமைமூடும் வேளையில் எனை நினைத்தாயா கண்ணா?
நிறைய கனவுகள், நிறைய எதிர்பார்ப்புக்கள்,
நிறைய கொஞ்சல்கள், நிறைய சில்மிஷங்கள்,
அனைத்தையும் இழந்து, அனல் மேல் விழுந்த புழு போல்
துடிக்கின்றேன்..... துவள்கின்றேன்...
வற்றாத நதி கூட ஒரு நாள் வறண்டு போகலாம்,
உன் நினைவு கொடுக்கும் துன்பங்கள் கரைந்து போகுமா?
என் உயிரோட்டத்தில் வாசம் செய்பவனே, சொல்லடா,,
இன்னொரு பிறவியில் நாம் இணைவது சத்தியமென்றால்,
இந்த நொடியில் அணைக்கின்றேன் மரணத்தை,
திசை மாறாமல் வந்துவிடு ........
என்னோடு வாழ்ந்து விடு.......
கண்ணீரோடு எழுதி முடித்தாள். புத்தகத்தை மூடி மார்போடு அணைத்தபடி, சாளரத்தை முழுவதுமாக திறந்தாள். பௌர்ணமி அவளுக்காக காத்திருந்தது போல் பிரகாசித்தது. "கண்ணா.... இன்னும் என் வாழ்வில் எத்தனை பௌர்ணமிகளை கடப்பேனோ எனக்கு தெரியாது... ஆனால் நான் வாழும்வரை ஒவ்வொரு பௌர்ணமி இரவையும் உன்னுடன் தான் கழிப்பேன்.. என்னைப் பொருத்தவரை இந்த பௌர்ணமி நீதான். பௌர்ணமி கூட தேய்ந்து மறைந்து பிறகு முழுமையடையும்... ஆனால் உன்மேல் நான் கொண்ட காதல் "இறவாக்காதல்" எந்நாளும் மரணிக்காது. என் கடைசி மூச்சுவரை என்னுள்ளே இணைந்திருக்கும். இது உறுதி" கவிதா கண்ணனிடம் மானசீகமாக உறவாடினாள்.. அவள் கூற்றை ஆமோதிப்பதுபோல் முகிலுக்குள் ஒருநொடி மறைந்த வெண்ணிலவு மீண்டும் வெளிவந்து அழகாய் காட்சியளித்தது அவள் ஆருயிர் கண்ணனைப் போல்...
..................********முற்றும்*******.................