எறும்பு தின்றால் கண் தெரியும்
எறும்பு தின்றால் கண் தெரியும் - பழமொழி
எறும்பு மிக சிறிய பிராணி. அவை உணவை இனம்கண்டு வாழ்கின்றன.முயற்சியுடன் உணவை தாமே தேடி சேகரித்து கொள்கின்றன.
புற்றில் வாழும் எறும்புகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் எறும்பு தின்றால் கண் தெரியும் என்று கூறுகின்றனர்?
சாதரணமாக நம் இல்லம்களில் நாம் பருகும் தேநீர்,பால் போன்றவற்றில் எறும்பு கிடந்தால் குழந்தைகள் பெற்றோரிடம் முறையிடுவதை அறிவோம். அவ்வாறு முறையிட்டால் பரவாயில்லை; குடி, எறும்பு தின்றால் கண் தெரியும் என்று வேடிக்கையாகவோ, சோம்பேறிதனமாகவோ கூறுவதை கேட்கிறோம். இதை விளக்குவதற்கு பழைய பாடலும்,கதையும் உள்ளது.
ஒரு ஊரில் வறுமைப்பட்ட பிச்சைக்காரன் இருந்தான். அந்த ஊரில் அவனால் திருப்தியாக வாழமுடியவில்லை என்றாலும் இறைவனை வேண்டியபடி தன் வாழ்நாளை கடத்தி வந்தான். அவனது அயலில் வாழ்ந்த ஒருவர் வெளியூர் சென்று சிலகாலம் கழித்து ஊர் திரும்பினார்.முன்பு வறுமையில் வாழ்ந்த பிச்சைக்காரன் பணக்காரனாக மாறி இருந்ததை கண்டு அதிசயித்தார்.எப்படி இவனுக்கு இவ்வளவு செல்வம் வந்தது என்று வியந்தார்.அவனிடமே கேட்டுவிட்டார். அதற்கு அந்த புது பணக்காரன் பாடல் ஒன்றின் மூலம் பதில் கூறினார்.
"கட்டத்துணியற்று காந்த பசிக்கு அன்னமற்று
எட்டி மரம் ஒத்திருந்த யான்
எறும்புக்கு நொய்யரிசி இட்டேன் - அதனால்
சிறுது பொருள் ஈந்தான் சிவன்.
அப்பொருள்க்கொண்டு அடியவர்க்கு அன்னமிட்டேன்
ஒப்புவமை இல்லான் உள முவந்தே இப்பார்
அளகேசன் என்றே அதிக செல்வம்
அளவிலாது ஈந்தான் அவன் "
இதுவே அவன் கூறிய பாடலாகும்.எறும்புகள் உண்பதற்கு உணவிட்டபடியால் ஈசன் இரங்கி செய்த உதவி இது என அவன் சுட்டிக் கட்டினான்.இந்த கதையில் இருந்து எறும்புகளுக்கு உணவிட்டால் புண்ணியம் கிட்டும்.அதே வேளையில் எறும்புகள் உண்பதற்கு உணவிட்டால் நமக்கு தெளிவான பாதை கிடைக்கும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் இந்த பழமொழியை உருவாக்கினர்.
இதன் மூலம் உயிர்களுக்கு உணவளித்தால் இறைவன் நமக்கு வேண்டியன யாவும் தருவான் என்ற கருத்து புலனாகிறது.