மெய்யில் உயிராய் என் அம்மா...

அம்மா என்ற வார்த்தைக்கு
அர்த்தம் காண தமிழ் அகராதி போதாது!
அவள் நாவை சுழற்றி பாடும்
தாலாட்டை கேட்க செவி இரண்டும் போதாது!

வலியின் உச்சத்தை அடைந்து
என்னை ஈன்று எடுத்தவள்,
அவள் சுகத்தை என்னில் இடம் மாற்றி
சுமந்த பத்து மாதம் போதாமல்
இன்னும் சுமந்து கொண்டு இருப்பவள் என் அம்மா!

அவள் உணரும் பிரசவ வேதனை
தாங்கமுடியாமல் தான் என்னவோ
நானும் அழுதுக்கொண்டே பிறந்திருக்கின்றேன்!

தவழும் வயதில் என் ஆனை அம்பாரியாக,
இளமையில் என் ஆசை தோழியாக,
முதுமையில் என் குழந்தையாக இருப்பவள்!

அன்பாய் சிரித்து பேசி,
அடிப்பது போல் நடித்து காட்டி,
அதட்டும் தந்தையை தோற்கடித்து,
நம் சந்தோஷம் ஒன்றுக்காக மட்டும்
வாழும் ஜீவன் என் அம்மா!

நிலவை அதிகம் பார்த்தது என்
அம்மாவகத்தான் இருக்கும்... நான்
உணவு உண்ண நிலவை காட்டி
அவள் அதிகம் சோறு ஊட்டியதால்!

பொழிகின்ற மழையில் நான் நனைந்தால்
நனைந்த என் தலைதுவட்டி, நனைத்திட்ட
மழையை திட்டிதீர்ப்பவள் என் அம்மா!

அன்னையின் கருவறையில் நான் வாழ்ந்த
காலம் யாவும் கவிதைகளாகும்!
கல்லறையில் அன்னையை என் சுமந்தால்
என் மரணம் கூட புதுவிதையாகும்!

இறுதியாக உறுதியாய் ஒன்று...
நாத்திகன் என்பவன் பூமியில்
இருந்திட வாய்ப்பில்லை,
அம்மா என்ற தெய்வம் பூமியில் வாழும் வரை!

இப்படி இன்னும் எழுதிக்கொண்டே
இருக்கலாம் அம்மாவை பற்றி...
இருந்தும் முடித்துக்கொண்டேன்.
என்னை பற்றி எழுதி உன் கைகள்
வலிக்க போகிறது என்று பாசத்துடன்
என் அன்னை கூறியதால்

எழுதியவர் : பிரபுராஜ் (1-Sep-13, 9:22 pm)
பார்வை : 84

மேலே