அழுக்கு !!
" ரத்னா ! பாத்ரூம் டைல்ஸ எல்லாம் நல்லா தேச்சி கழுவு .... என் மகனுக்கு ஒரு சின்ன அழுக்கு இருந்தா கூட பிடிக்காது . நீ கூட பழசா இல்லாம நீட்டா டிரெஸ் பண்ணிட்டு வா.. உனக்கும் ரெண்டு புடவை எடுத்து வச்சிருக்கேன் .... புரிஞ்சுதா !" விரட்டினாள்
பரிமளம்.
" சரிங்கம்மா ! "
"என் பிள்ளை ,மருமக , பேரப்பிள்ளைங்களப் பார்த்து மூணு வருஷம் ஆயிடுச்சி ...! இப்ப நல்லா வளர்ந்திருப்பாங்கல்ல...?"
" ஆமாங்கம்மா ! "
"இன்னும் ரெண்டே நாள்தான் ! அப்புறம் நான் அவங்களோட சந்தோஷமா இருப்பேன். அவங்களுக்குப் பிடிச்சதெல்லாம் செஞ்சு கொடுப்பேன் ."
நல்லா செய்யுங்கம்மா ....!
"ரத்னா ! என் பேத்திக்கு மொட்டை அடிச்சி காது குத்தணும் ...! குல தெய்வம் கோயிலுக்குப் போகணும்....! மாவிளக்கு போடணும் ....!! "
"போடலாம்மா ....நான் நாளைக்கு மாவு அரைச்சு
ரெடி பண்ணிடறேன்ம்மா ! "
"நாளைக்கு கோயம்பேடு போயி உதிரிப் பூ வாங்கிட்டு வந்துடு ... தொடுத்து ஃபிரிஜ் -ல வச்சிடலாம் ...!! "
"ரத்னா அப்படியே ஒரு ரெடிமேட் ஜடை வாங்கிட்டு வா ....!புரிஞ்சுதா ? எல்லாத்துக்கும்
சரிம்மா சரிம்மான்னு சொல்லி மசமசன்னு
நிக்காதே ! "
"சரிங்கம்மா ! "
"ரத்னா மொட்டமாடில பாசிப்பயறு ,கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு ,ரோஜா இதழ் எல்லாம்
காய வச்சிருக்கேன் ....மிஷின்க்கு போயி அரைச்சுட்டு வந்து அந்த புது டப்பாலபோட்டு வை. என் மருமக அனுவுக்கு ரொம்ப பிடிக்கும் ...!"
" இதோ போறேன்மா ....!"
" ரத்னா !"
"என்னங்கம்மா ?"
"நான் பேசிட்டே இருக்கேன் ....நீ ஒண்ணுமே
பேசலயே ?"
" உங்க பாசத்தப் பாத்து வாயடைச்சு போச்சும்மா!
"சிவகாசில இருந்து நெறையா பட்டாசு வாங்கி வச்சிருக்கேன் ....! எல்லாருமா சேர்ந்து வெடிச்சி கொண்டாடனும் .... !"
இரண்டு நாளில் தீபாவளி ! ரஞ்சித் விடியற்காலை தன் குடும்பத்தோடு காரில் ஒரே ஒரு பேக்குடன்
வந்து இறங்கினான் . பரிமளத்துக்கு பெருமை பிடிபடவில்லை. குழந்தைகளை வாரி அணை த்து முத்தமிட்டாள். அவர்களின் சிவந்த நிறம் மேலும் பிங்க் கலரில் இருப்பதைப் பார்த்து ரசித்தாள்.
அனு தலை முடியைக் கட் பண்ணி ரொம்ப ஸ்டைலா அழகா இருந்தாள்.
"இன்னிக்கு எல்லோருக்கும் சுத்தி போட்டுடணும்... நம்ம கண்ணே பட்டுடும் போல இருக்கு...!" மனதிற்குள் நினைத்தவள் ,
"மொதல்ல எல்லாம் குளிச்சிட்டு சாப்பிட வாங்க ...! புது டிரெஸ்ஸ் எடுத்து வச்சிருக்கேன் ....!சாமி கும்பிடலாம் ...!"
"அத்தை! நீங்க எதுவும் சிரமப் பட வேண்டாம் .நாங்க வரும் போதே ஹோட்டல ரூம் புக் பண்ணிட்டு வந்துட்டோம்...... அங்க ரொம்ப வசதியா இருக்கும் ... தீபாவளி கூட அங்கேயே செலிபிரெட் பண்ணலாம் ...! நீங்களும் வந்துடுங்க !"
"என்னப்பா ரஞ்சித் ! நாளும் பொழுதுமா வீட்டுல இருக்காம ஹோட்டலுக்கு போறதா ...?"
"அம்மாம்மா ! உங்க பேரனும் பேத்தியும் ஏசி
இல்லாம இருக்க மாட்டாங்க ...! நீங்க ஏன்ம்மா கஷ்டப்பட்டு சமைக்கணும் ...? நீங்களும் கெளம்புங்கம்மா ....!"
விழி ஓரம் நீர் எட்டிப் பார்த்தது .யாரும் பார்க்காவண்ணம் துடைத்துக் கொண்டாள்.
ரஞ்சித் ! நான் இன்னைக்கி வரலப்பா ....வீட்டுக்கு அஞ்சாறு பேரை சாப்பிட கூப்பிட்டிருக்கேன் ....
வருவாங்க ....!நாளைக்கு பாத்துக்கலாம்பா .....!"
வாஷ்பேசினைத் தேய்த்து கழுவியபடி இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ரத்னா மனதிற்குள் முணுமுணுத்தாள் .
" அழுக்கு இந்த வாஷ்பேசின்ல இல்ல ...வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த ரஞ்சித் மனசுல தான் இருக்கு .... தாய் மனசப் புரிஞ்சிக்கத் தெரியாத இவன்லாம் ஒரு பிள்ளையா ?"
ரத்னாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் பரிமளம் தலை தாழ்த்திக் கொண்டாள்.