"இரண்டு மகாலெட்சுமிகள்"

காலை நேரம் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டுருந்தது.

"கலா! அப்பா எங்கே?," என்று கேட்டுக்கொண்டே அம்மா வந்தாள்.

"அம்மா இன்னைக்கி ஆதரவற்றோர் இல்லத்தில உள்ளவங்களுக்கெல்லாம் உடம்பு செக்கப் பண்ணனும்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. கிளம்பி போயிருப்பாங்க"

"சரி சரி சின்னவ எங்க?"

"அதோ அடுக்களையில சத்தம் கேட்குது பாரு"

"என்னடி அங்க சத்தம்?"

"அய்யோ அம்மா இந்தக் கதைய கேளு. காலையிலயே இந்த உமாப்பாப்பா வந்து சாக்லேட் டப்பா எங்கேனு சத்தம் போடுதும்மா.
நீங்கதான் எடுத்துவச்சிருக்கீங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குதும்மா. நான் தான் எங்கேயோ ஒளிச்சுவச்சிருக்கேன்னு திட்டுதும்மா", என்று வேலைக்காரம்மா சொல்ல‌

அதற்குள் சின்னவள் உமா பாத்ரூமுக்குள் ஓடிவிட்டாள்.

"ஏண்டி கலா! இவ இந்த சாக்லேட் பழக்கத்த எப்பத்தான் விடுவா"

"அம்மா! ஒண்ணாலதான் இந்தப்பழக்கம். சின்ன வயசுல இருந்து குடுத்துகுடுத்து பழக்கிட்ட. மாத்திப்பா விடும்மா. சரிம்மா நானும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு கிளம்புறேன். நீ சீக்கிரமா வா", என்று சொல்லி கலாவும் கிளம்பி சென்றுவிட்டாள்.

உமாவும் காலேஜ் கிளம்பியாச்சு.

"செல்லம்மா"

"என்னம்மா", என்று வேலைக்காரி செல்லம்மா வந்து நின்றாள்.

"ஆதரவற்றோர் இல்லத்தில உள்ளவங்களுக்கெல்லாம் ஏதாவது புதுசா சாப்பிட செஞ்சு எடுத்திட்டு போவோம். எல்லா சாமானும் இருக்குல்ல"

"இருக்கும்மா. நீங்க சொல்லுங்க. நான் செய்யுறேன்"

"இல்ல. நானும் சேந்து செய்யுரேன்டி", என்றவாறு இரண்டு பேரும் சமையலறைக்கு சென்றனர்.

இரண்டு பேரும் காரில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கிளம்பினர். செல்லம்மா சொன்னாள் "அம்மா நான் கார் ஓட்டறேன். நீங்க உட்காருங்கம்மானு" சரி என அமர்ந்துகொண்டவாறு பழைய நினைவுகளுக்குள் சென்றாள்.

பல வருடங்களுக்கு முன்பு, தன் கணவர், மற்றும் பெரிய மகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தாள்.

அப்போது சொந்தக்கார பெண் ஒருத்தி வந்து, "என்ன, எப்படி இருக்கீங்க? எத்தனை பசங்க உங்களுக்கு", என்று கேட்டாள்.

"ஒரு பொண்ணு தான். இதோ பாருங்க. யூ.கே.ஜி படிக்கறா", என்று அறிமுகப்படுத்த, அந்தப்பெண்ணோ எங்களைப்பார்த்து ஒரு குழந்தை போதுமா.
இன்னொன்னு வேணாமா என்று கேட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

திருமணத்திற்கு வந்தவர்களெல்லாம் இதே கேள்வி தான்.

சில ஆண்டு கழித்து அடுத்த குழந்தையும் பிறந்தது. அதுவும் பெண் குழந்தையே! எங்களுக்கும் மிகவும் சந்தோஷம். நாங்கள் 4 பேரும் மிகவும் ஜாலியாகத்தான் இருப்போம்.

ஆனால் இதேபோல் சில சொந்தங்கள் வருவார்கள். எத்தனை பசங்க என்று கேட்பார்கள். இரண்டு பெண் என்று சொன்னால், ரெண்டும் பொண்ணா போச்சா, ஒரு பையன் பொறந்து இருக்கலாம் என்பார்கள்.

இப்படி அவர்கள் சொல்லும் போதெல்லாம் எனக்கு மிகவும் கோபம் கோபமாக வரும். என் கணவர் தான் சொல்லுவார், கவலைப்படாதே நமக்கு இரண்டு மகாலெட்சுமி என்று,

நானும் அன்றிலிருந்து என்னை யார் கேள்வி கேட்டாலும் எனக்கு இரண்டு மகாலெட்சுமி என்று தான் சொல்லுவேன்.

இதோ என் மூத்தமகள் கலா ஒரு பிரபல டாக்டர். சின்னவ படிச்சிட்டு என்ன ஆகவேண்டும் என்று ஆசை இருக்கிறதோ அப்படியே ஆகட்டும் என்று விட்டுவிட்டோம்.

இதோ என் கணவர் ஒரு ஆதரவற்றோர் இல்லம் கட்டி ஆதரவில்லாதவர்களுக்கெல்லாம் ஆதரவாக இருப்போம் என்று என்னிடம் எனக்காகவே இதை செய்துகொடுத்தார்.

நானும் செல்லம்மாவும் அங்கு வந்துவிட்டோம். செல்லம்மாவும் இதில் ஒருவர். அப்பப்போ வீட்டுக்கு வருவார். அவள் ஆதரவு இல்லாமல் நின்னப்ப என்னோட சின்ன மகள் தான் இவரை அழைத்து வந்து இவருக்கு கார் ஓட்டும் அளவுக்கு பயிற்சி கொடுத்தாள்.

கலாதான் அனைவருக்கும் செக்கப் செய்து கொண்டிருந்தாள்.

என் கணவர் அங்கிருந்து வந்து, "என்ன மேடம்! இல்லத்துக்கு சொந்தமானவனங்களே லேட்டா வந்தா எப்படி", என்று கிண்டலடித்தார்.

"நினைச்சத சாதிச்சிட்ட. இரண்டு பெண்ணுங்களையும் பெரிய ஆளா ஆக்கீட்ட. இரண்டும் பெண்ணா என்று கேட்டவர்களையெல்லாம் வாய்மூட வைக்கிறேன் என்று சொல்லி சாதிச்சிட்டே", என்று சொன்னார்.

"நான் என்னங்க செஞ்சேன். நான் நெனச்சேன். நீங்க கூடவே நின்னீங்க. பொண்ணுங்க சாதிச்சிட்டாங்கா", என்றேன் கர்வத்தோடு.

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (3-Sep-13, 9:36 am)
பார்வை : 618

மேலே