இரவுப் போராளிகள்
காதலாய்
கை பிடித்தோம்!
கண்ணிறைவாய்
வாழ்ந்தோம்!
இரவும் பகலும்
என்பது போல்
குடியும்,குடித்தனமுமாய்
நாம்!
வீதியில் கிடந்த உன்னை
வீட்டுக்கு அழைத்து வரும்போது கூட
நான் நினைக்கவில்லை
விலை பேசியிருப்பாய் என்னை என்று!
விழித்துக்கொள்ளும் முன்
நான் கிடந்தேன்
வீணன் ஒருவனின்
வீட்டறையில்!
உன் வீட்டில்
இருளகற்றி
விளக்கேற்றியவள்-இன்று
இருட்டு முகங்களில் வாழ்கிறேன்!
எத்தனையோ
பெயர்கள் எனக்கு!
பாவிகளின்
மனநிலையைப் பொறுத்து!
இரவுகளின் ராணி நான்.
என் பார்வையிலும்,
கையசைப்பிலும்
லட்சங்கள் என் காலடியில்!
மரமாய்ப் படுத்து
பணமாய்ப் போர்த்தி
பிணமாய் எழும் வாழ்க்கை
என் வாழ்க்கை!
'நலமில்லை'என்றாலும்
நாய்களாய்த் துரத்தும்
நச்சுக் காற்றையே
சுவாசிக்கிறேன்!
பேரம் பேசுகிறான்
என்னுடம்பில்
தழும்பைக் கண்டு!
வித விதமான அரிதாரங்கள்
மனைவியாய்,தோழியாய்
சேவகியாய் எல்லாமுமாய்
சிலமணி நேரம் மட்டுமே!
என்றுமே நாங்கள்
சுமங்கலிகள் தான்!
எங்கள் இரவுக்
கணவர்கள் இறப்பதேயில்லை!