எலி உறவு
அந்த இரண்டு குட்டி எலிகள் ஹாலில் இருந்த அலமாரியனடியிலிருந்து எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தன!
விநாயகம் மும்மூரமாக மறுநாள் ஆபீசில் சமர்பிக்க வேண்டிய பைலை சரிபார்தபடியே... அந்த எலிகளை ஓரகண்ணால் கவனித்து வந்தான்.
வீட்டுக்காரன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற இறுமாப்பில் அதிலொரு சுண்டெலி ஹாலின் அடுத்த மூலைக்கு குடு குடுவென ஓடியது! அதை துரத்திக்கொண்டு மற்றொரு எலியும் துள்ளி குதித்து கொண்டு ஓடியது....
மின்னலடிக்கும் துரு துரு குட்டி கண்களுடன் அங்கும் இங்கும் துள்ளி குதித்து சேட்டை செய்யும் குட்டி சுண்டெலிகள் அவன் கவனத்தை சுண்டி இழுத்தது.
தன் பெயரும் எலியை வாகனமாக கொண்ட விநாயக பெருமாளின் பெயராக இருப்பதாலோ என்னவோ, விநாயகம் ஈசி சேரில் சாய்ந்து வசதியாக உட்கார்ந்து சுண்டெலிகளின் அட்டகாசத்தை ரசிக்க ஆரம்பித்தான்.
இதைக்கண்ட அவன் மனைவி நந்தினி, கத்திகொண்டே துடைப்பைகட்டை எடுத்து வந்தாள் - அதுகளை அடித்து விரட்ட!
"அடிக்காதே விடு நந்தினி! கொஞ்ச நேரம் விளையாடி விட்டு போய் விடும்" என்றான்.
"உக்கும் என தோள்களில் தன் மோவாகட்டையை இடித்து......விளையாட அதுகள் என்ன நம்ம குழந்தைகளா?.... என எகத்தாளம் செய்த நந்தினி..... "ஒரு வேலையும் செய்ய விடாதீர்கள்" என கடிந்து கொண்டு நகர்ந்தாள்.
நமட்டு சிரிப்புடன் தன் அலுவல் வேலையை தொடர்ந்த, விநாயகம் தன் இரண்டு குழைந்தைகளை நினைத்து பார்த்தான்.
தற்பொழுது முழு பரீட்சை லீவில் தங்கள் பாட்டி வீட்டிற்கு குழைந்தைகள் சென்றுள்ளன. குழைந்தைகள் வீட்டிலிருந்தால் எப்போதும் அமர்க்களம்தான்!!!
"தற்போது குழைந்தைகள் வேலையை எலிகள் செய்கின்ற போலும்" - அவன் நினைத்து கொண்டு சிரித்துக்கொண்டான்.
தங்களை யாரும் எதுவும் செய்யாத குஷியில், சுண்டெலிகள் அறையிலிருந்த பொருட்களின் மேலேறி உருட்டி கும்மாளம் போட ஆரம்பித்தன.
ஆயிற்று இரண்டு மாதம்! லீவு முடிந்து பள்ளி திறக்க போவதால், குழைந்தைகள் வீடு திரும்பினர்.
இந்த இரண்டு மாதமும் ஏதோ ஒரு சால்ஜாப்பு சொல்லி அந்த எலிகளை மனைவி துரத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தான்.
எலிகளின் சேட்டைகளை ரசிப்பது அவனுடைய அன்றாட பொழுது போக்குகளில் ஒன்றாக மாறியிருந்தது.
அடுத்த நாள் காலை! என்னங்க... என்னங்க... என்ற மனைவியின் குரலை கேட்டு அவன் எழுந்தான். என்னம்மா???!!!.... என தூக்க கலக்கத்தில் கேட்ட கணவன் எதிரில் பொறியில் சிக்கியிருந்த இரண்டு எலிகளை நந்தினி வைத்தாள்.
தூக்கி வாரி போட்டது வினாயகத்திற்கு! சொன்னால் தடுத்து விடுவேன் என நினைத்து, எனக்கு தெரியாமலே பொறி வைத்து என் மனைவி சுண்டெலிகளை பிடித்திருக்கிறாள் போல!
எழுங்க... ராத்திரியே பொறி வைத்து எலிகளை பிடித்து விட்டேன்... குழைந்தைகள் இருக்கிற வீடு சுத்தமாக இருக்கணும்.... என்ற நந்தினியின் குரலை கேட்ட விநாயகம் தன் நிலைமைக்கு திரும்பினான்.
"போங்க பொறியை எடுத்துட்டு போய் எலிகளை வெளியே விட்டுட்டு வாங்க" அவள் சொல்வதை கேட்டு கொண்டே மனசில்லாமல் அவன் எழுந்தான்.
இதற்கு மேல் எலிகளுக்கு வக்காலத்து வாங்கினால், அவன் மனைவி பத்ரகாளியாகி விடுவாள் என்று அவனுக்கு தெரியும்.
மனசில்லாமல் இரும்பு பொறியை எடுத்துக்கொண்டு வெளியே நகர்ந்தான்.
இந்த இரண்டு மாதத்தில் இப்போதுதான் அந்த எலிகளை மிக அருகில் பார்க்கிறான். குட்டி குட்டி கண்களோடும் கூர் மீசையோடும் ரொம்ப அழகாத்தான் இருந்தன சுண்டெலிகள்.
"தன்னை எலிகள் குட்டி கண்களை மினுக்கி வாஞ்சையோடு பார்ப்பது போல தோன்றியது".... மீண்டும் தங்களை வீட்டிற்கே கூட்டிபோக சொல்லி கெஞ்சுவதை போலிருந்தது.
"என்னங்க விட்டுட்டீங்களா?... பின்னால் நந்தினி குரல் அவனை உலுக்கியது.
மெதுவாக ரோட்டோரம் பொறியை வைத்து திறந்தான்..... அனால் சுண்டெலிகள் பொறியை விட்டு வெளியே வரவில்லை..... என்னையே பார்த்து கொண்டிருந்தன......
"என்னங்க செய்யுறீங்க?" என்று வந்த நந்தினி ஒரு குச்சியினால் பொறியை லேசாக தட்டியவுடன், பயந்து போன சுண்டெலிகள் பாய்ந்து வெளியே வந்து சாலையோரம் இருந்த கால்வாயை நோக்கி குடு குடுவென ஓடின.
கால்வாய்க்குள் நுழையுமுன் தன்னை எலிகள் திரும்பி பார்ப்பது போல தோன்றியது.
"வாங்க போகலாம் உள்ளே".... கூப்பிட்ட மனைவியின் குரலை தொடர்ந்து கனத்த மனதோடு விநாயகம் வீட்டினுள் நுழைந்தான்.
அடுத்த நாள் அலுவலகம் போக வெளியே வந்த விநாயகம்..... தன்னையறியாமல் சாலையோர கால்வாயை திரும்பி பார்கிறான். அந்த இரண்டு எலிகுட்டிகளும் மூக்கை மட்டும் வெளியே விட்டு அவனை பார்ப்பது போல இருந்தது. ஏதோ இனம் புரியாத சோகம் கவ்வ மெதுவாக நடையை கட்டினான்.