வேண்டும்
பொதிகையில் வீசும்
தென்றல் காற்று - தார்ப்
பாலையிலும் இதமாய்த்
தவழ்ந்திட வேண்டும் ......!!
இமயத்தில் சில்லென
சாரல் அடிக்க
பொருணையில் புதுவெள்ளம்
பாய்ந்திட வேண்டும் ....!!
விந்தியம் உச்சியில்
ஏறிப் பார்க்க
குமரியின் வள்ளுவன்
தெரிந்திட வேண்டும் ...!!
காஷ்மீரத்தின்
ரோஜாக் கூட்டம்
நதிவழி மிதந்தே
நம்மையடைய வேண்டும் ...!!
அழகிய அந்தமான்
தீவுக் கூட்டமும்
அசைந்து நீந்தி
அருகில்வர வேண்டும்....!!
முக்கடலுடன் இமயமும்
இணைந்து எல்லையாய்
அன்னை பூமியைக்
காத்திட வேண்டும் ....!!
பொங்கிவரும் காவிரி
தங்கு தடையின்றி
சிங்கநடை போட்டு
தமிழகம்வர வேண்டும் ....!!
கங்கையொடு வைகை
கரங்கோர்த்து பாய
மங்கைநான் அதிலே
நீராட வேண்டும் .....!!