கற்ற வாழ்க்கைப்பாடம் !
வாழ்க்கை சில நேரங்களில் பூரிப்படைய வைக்கும், சில நேரங்களில் ஸ்தம்பிப்படைய வைக்கும். பூரிப்படையும்போது ஏன் எனக்கு என்று கேள்வி கேட்காத நாம் , பிரச்சனையின் பொழுது ஏன் எனக்கு மட்டும் ?என்று கேள்வி கேட்கிறோம். இதற்கு நாம் வளர்க்கப்பட்ட முறை கூட காரணமாக இருக்கலாம். தேர்வு மதிப்பெண்கள் வெளி வரும்போது பாராட்டபடுவதை விட, நாம் நம்மை விட அதிக மதிப்பெண் எடுத்த மற்றவர்களுடன் ஒப்பிடபடுகிறோம். இதுவே பிற்காலத்தில் எது நடந்தாலும் பிறருடன் ஒப்பிட ஒருகாரணம் ஆகி விடுகிறது. ஆனால் பிரச்னை ஏற்படும்பொழுது ஒப்பிட்டு பார்ப்பதை விட, ஏற்றுக்கொண்டு சூழ்நிலையை மாற்ற முயல்வது தான் சரியான தீர்வு. ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் நாமே நமது பிரச்சனையை மனத்தளவில் பெரிதாக மாற்றி மேலும் உழல்கிரோமே தவிர, நன்மை எதுவும் இல்லை. ஒரு ஹிந்தி படத்தில் கதாநாயகி சொல்வாள் "நாங்கள் வெளியில் இருந்து பார்க்கும்பொழுது சந்தோசமாக தெரிவோம், உள்ளே வர வர எங்களிடம் ஒளிந்துகிடக்கும் துக்கம் வெளிப்படும் " என்று. இது நிதர்சன உண்மை.மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது வெளியில் மட்டும் பார்க்கும் நாம், அவர்கள் அருகில் சென்று பார்க்க தவறி விடுகிறோம். அருகில் சென்றால் அவர்களுடைய துன்பமும் தெரிய வரும். பிரச்சனையின் பொழுது ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால், நம்மை விட அதிக பிரச்சனையோடு இருப்பவர்களோடு ஒப்பிடுங்கள். நமது பிரச்னை கடுகளவு ஆகி விடும். ஒரு உலக கூற்று, "பிரச்சனை உங்கள் கட்டுக்குள் உள்ளதா ? பிறகு ஏன் பயம் ?. பிரச்னை உங்கள் கட்டுக்குள் இல்லையா தீர்வு தெரியவில்லையா ?, அப்படியனில் பயந்து என்னவாக போகிறது. தீர்வு நல்லதாகவும் இருக்கலாம்.எனவே பிரச்சனையை கண்டு பயபடாதீர்கள்". ". இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக கருதுங்கள். இன்பத்தை தலைக்கு ஏற்றி தலைக்கணம் ஏற்றாதீர்கள் , துன்பத்தை மனதிற்கு இறக்கி மனதை பாரமாக்காதீர்கள் மேலே சொன்னதை ஏற்று கொண்டால் எப்பொழுதும் வாழ்கையை சிறப்பானதாக வைத்து கொள்ள முடியும்