பாவம் இவள்

ஆசைகள் துறந்த
ஆடம்பரம் மறந்த இவள்

இவள் மனப் பட்டறைக்குள்
ஆயிரம் கேள்விகள்
பட்டை தீட்டப்பட்டாலும்
அவற்றின் கணம் தங்காது
இவள் விழிகள் கணக்கும்

இவள் யாசிப்பதெல்லாம் தனிமை
சுவாசம் மறந்து
யோசிப்பதெல்லாம் கவிதை

காலத்தின் கெடுபிடியில்
அவ்வப்போது
பருவக்காற்றுகள் இவளையும்
பதம் பார்க்கவே செய்கிறது

ரசிக்க யாருமில்லையென
தினம் புல்மீது
அழுதுவிட்டுப்போகும் இரவோடு
இவளும் அழுவாள்

அப்போதெல்லாம்
கண்ணீரில் வழுக்கி
விழுந்த
இவள் வார்த்தைகள் நொண்டும்

யாரும் யாரையும்
நொந்து பலனில்லைஎன
தனக்கே சமாதானம் செய்வாள்

இவளது வாழ்க்கை இராகத்தில்
ஆனந்த ராகம்
காணாமல் போயிருக்கும்

கைரேகையில்
அதிஷ்ட ரேகை அழிநது போயிருக்கும் .

பல சமயங்ககளில்
இவள் கனவுகளுக்கு உயிர்கொடுக்க
வந்த எத்தனையோ வானவில்கள்
காலத்தால் சுரண்டப்பட்டிருக்கும்

ஒக்சிஜன் என நினைத்து
இவள் சுவாசித்த காற்றேல்லமே
காபன்கள்தான்

இவள் மூச்சுப்பட்டு காலையில் பூத்த
சில கவிதைப்பூக்களும்
அழுகிப்போயிருக்கும்

எதையோ நாடும் இதயம்
பஞ்சடைந்த கண்கள்
அடக்கம் பெற்ற உணர்வுகள்
பக்குவப்பட்ட மனம்
பராமரிக்கத உடம்பு
இவைகள் மட்டுமே
இவளுக்குள் எஞ்சியிருக்கும் .

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (6-Sep-13, 11:43 am)
Tanglish : paavam ival
பார்வை : 64

மேலே