மகிழ்வித்து மகிழ்வோம்
பிள்ளை சிரிப்பில் கள்ளமில்லை
பிறருக்கு கொடுக்கும் துன்பம் இல்லை
கொஞ்சி மகிழும் பேச்சுக்களாலே
கொள்ளை போகும் எவரின் மனமும் ..........
மனிதன் வளர்ந்து மனம் மாறிட
குணத்தை மறந்து பணம் தேடிட
துன்பங்கள் கொடுக்க துணிந்து போகிறான்
தொல்லைகள் கொடுத்து மனிதன் வாழ்கிறான் .....
சுயநலம் மட்டும் நாடும் மனிதன்
சூழ்ச்சிகள் செய்து நாளை கழிக்கிறான்
ஒருவனை ஏச்சி ஒருவன் வாழ்ந்திட்டு
உயிரற்ற பிணமாய் கரைந்து போகிறான் ........
உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும்
உலகினில் ஏனோ வேற்றுமை எண்ணம்
ஒருவர் மனதினை காயப்படுத்துவதால்
உனக்கு என்னையா அத்துனை இன்பம் ........
ஒவ்வொரு மனிதன் ஒவ்வொரு குணமே
உணர்ந்து வாழ்தலே மனித இயல்பே
இருந்தும் என்றுதான் புரிய போகிறான்
மனிதன் மனிதனாய் என்று மாறுவான் .........
கள்ளம் கபடமில்லாத மனதை கொண்டு
கலவர குணத்தை அறவே மறந்து
ஒவ்வொரு மனிதனையும் சமமாய் மதித்து
ஒற்றுமையோடு சிரித்து வாழு .........
வஞ்சனை கொண்ட மனமும் வேண்டாம்
வன்முறை நிறைந்த வார்த்தைகள் வேண்டாம்
அன்பு நிறைந்த வார்த்தை உதிர்த்து
கருணையோடு காத்திட பாரு ...........
உந்தன் நலனை நாடுவது போலே
அவரின் நலனிலும் அக்கறை கொள்ளு
உன்னை நீ நேசிப்பது போலே
அவரையும் கொஞ்சம் நேசித்து வாழு ........
நீ மட்டும் சிரிப்பது நீதி இல்லை
பிறரை மகிழ்வித்து நீயும் மகிழு
பண்புள்ள வார்த்தைகள் உதிர்க்க தொடங்கினால்
வம்புள்ள உலகம் மறைய தொடங்கும் .........