திரிசொல்
சொல் > இலக்கிய வகைச் சொற்கள் > திரிசொல்
கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
(எ.கா) தத்தை, ஆழி, செப்பினான்
மேலே காட்டப்பட்டுள்ள சொற்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாத வகையில் வந்துள்ளன.
தத்தை-கிளி
ஆழி-கடல்
செப்பினான்-உரைத்தான்
என்று கற்றவர்களால் பொருள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை திரிசொற்கள் என்று அழைக்கப்படுகின்றன
=============
ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
ஒரே பொருளைத் தரும் பல திரிசொற்கள் தமிழில் உள்ளன. அவை ஒரு பொருள் குறித்த பல திரிசொல் எனப்படும்.
(எ.கா) கமலம் கஞ்சம் முண்டகம் முளரி
இவை யாவும் தாமரை என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் பெயர்ச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரிசொற்கள் ஆகும்.
செப்பினான், உரைத்தான், மொழிந்தான், இயம்பினான்
இவை யாவும் சொன்னான் என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் வினைச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொற்கள் ஆகும்
=========
பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
பல பொருளைத் தரும் ஒரு திரிசொல்லும் தமிழில் உள்ளது. அது, பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனப்படும்.
(எ.கா) ஆவி
இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் என்கிறோம்.
(எ.கா) வீசு
இச்சொல்லுக்கு எறி, சிதறு, பரவச்செய், ஆட்டு முதலான பல பொருள்கள் உள்ளன. வீசு என்பது வினைச் சொல். எனவே இதைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் என்கிறோம்.
"ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்" - (நன்னூல் : 272)
ஒரு பொருளைக் குறிக்கும் பலசொற்களாகவும் பலபொருள்களைக் குறிக்கும் ஒருசொல் ஆகவும் கற்றோர் மட்டுமே பொருளை உணரும் வகையில் வருவன திரிசொல் ஆகும் என்பது இதன் பொருள்