பால் மடி இல்லாமல் போகலாம்!
புதையுண்ட உறவுகளை
தோண்டி தோண்டித்
தேடிப் பார்த்துவிட்டு
விரக்தியாய் போகிறோம் நாங்கள்
தோண்டலில் கிணறாய்ப்போன எங்கள்
நிலங்களில் வேளாண்மை
செய்து கொண்டிருக்கிறார்கள்
புதைத்தவர்கள்.
கொஞ்சம் விழித்துக்கொண்டு
இருக்கும் இடத்தை
முள்ளிக் கம்பிகளால்
வேளிப்போட்டுக் காத்தோம்
விடிந்து பார்க்கும்போது
முள்ளுக் கம்பிகளையே
அறுத்துக் கொண்டு
போய்விட்டிருந்தார்கள்
இரவில் காவலுக்கு
நின்றவர்கள் .
காவல் காப்பதாகச்
சொல்லிக்கொண்டு
எங்களையே
களவாடிக் கொண்டிருக்கும்
இந்த நாகரீகத்
திருடர்களிடமிருந்து
தப்பிப் போக
வழியைத் தேடினால்
எல்லா வழிகளையும்
கவனமாக
அடைத்து விட்டிருக்கின்றார்கள்
எங்கள் முள்ளுக் கம்பிகளால் .
ஒன்றுமட்டும்
எங்களுக்குப் புரிகிறது
சுதந்திரமாய் இருக்கின்றோம்
ஆனால்
திறந்தவெளிச் சிறையில் என்று.
எங்கள் ஆடுகள்
சுதந்திரமாய்
திரிகின்றன
அப்படியே அவை
நிரந்தரமாய் திரியட்டும்
இது எங்கள் ஆடுகள்
இதை கொல்வதற்கும்
வளர்ப்பதற்கும்
யாருக்கும் உரிமை இல்லை
என்று உரக்கச் சொல்லும்
இந்த ஓநாய் கூட்டங்கள்
இப்போது வேட்டையில்
இறங்கியுள்ளன
ஒ.. ஆடுகளே..
இந்த மே(ஏ) ய்ப்பர்களை
இவர்கள் கட்டும்
காசுக் கொலைகளை
தின்று வாக்குப் பாலைச்
சுரந்து விடாதீர்கள்.
நாளை உங்கள் குட்டிகள்
குடிக்க பால் மடியே
இல்லாமல் போகலாம்,!