நாடுகடத்துங்கள்
தயவு செய்து
நாடுகடத்துங்கள்
பசியிலாத
தேசம் பார்த்து
இந்த பரதேசியை
நாடு கடத்துங்கள்
யோசிக்க மறந்த மூளையில்
மல்யுத்தம் செய்து தோற்றதில்
விட்டத்து சிலந்தி
வலை அடுக்கும் சிரித்தது
சிலந்தி அதனினும் சிரித்தது
பணியிலாது
பிணிவந்து
தரை ஊருமுன்
என்னை -
நாடு கடத்துங்கள்
கனத்த பருப்பொருளாய்
ரத்த இதயம் கனக்கிறது
கணங்களில்
சுவாசிப்பதும்
கஷ்டம் ஆகிப் போகிறது
காலிருக்க முடமானேன்
காதிருக்க செவிடானேன்
மூச்சிருக்க பிணமானேன்
மொத்தத்தில் ஜடமானேன்
என்னிலைக்கு
மேற்கோள் காட்ட
மண்ணுழும் மண்புழுவும்
மறுதலிக்கும்
உறங்கி தின்று
கழிக்கும் நான்
மக்கிப்போன புழு
மண்ணில் இருப்பதே புண் .
என்னையே நான் வெறுத்து
எல்லோரின் உறவறுத்து..
.குப்பைக்கு போவதற்குள்
காயமிது சாகட்டும் -
இல்லை போகட்டும்
நாடு கடத்துங்கள் -இல்லை
காவு கொளுத்துங்கள்