பிரசவத்தில் பிரசவிக்கும் தாய்!!!
கம்பனின் கற்பனைக்கெட்டாத
கவியொன்று பூத்தது என்னுள்
கவியே நீ
கண்ணனா !!! கண்ணகியா !!!
ஈருயிர் சுமக்க வைத்து
தாய்மை பட்டம் சூட்டி
பெண்மையை பூர்த்தியாக்கிய
வீர குடி வித்தே !!!
பொதிகை தமிழே
உன்னை உயிரிலே செதுக்கி
உதிரத்தை உணவாக்கி
பத்து திங்கள் காத்தேன் ...!!!
குலம் காக்கும் குருத்தே
குங்கும பூ பாலாம்
இசைகேட்டு நீ துயிலிட
வளைகாப்பு விழாவாம் ...!!!
எட்டி உதைத்து விளையாடி
கருவறையிலே வீணை மீட்டி
சிந்தையை மயக்கிய சிறு தளிரே
ஏங்கினேன் உன்முகம் காண ...!!!
மஞ்சள் திரையிட்டு ஆதவன்
மதி வருகைக்காக மறைந்திருக்க
முகில்கள் முத்தமிடும் மாலையிலே
பெற்றேன் பிரசவ வலியை ...!!!
அக்கணமே மனதில் மழை
இன்ப துளிகள் கண்களில்
சிப்பியின் முத்தாக முகம்காட்டி நீ
அம்மா என்றழைக்க வருவதையெண்ணி ..!!!
வலியின் வன்முறையில்
ரணம் தேகத்தை தீயாக்கி
உயிர் நாடியை இறுக்கி
ஆன்மாவை ரணமாக்கியது ..!!!
அந்நொடியில் இரத்த திலகமிட்டு
நவ ரத்தினமாய் உதித்தாய்
கீதத்தோடு உன்பிஞ்சு விரல்கள்
எனைத்தீண்டியதும் நானும் பிரசவித்து ..!!!
அள்ளி அணைத்து முத்தமிட்டேன்
அங்கமெல்லாம் என் உயிர் தங்கமே .
அங்கமானாய் அம்மாவின் வாழ்வில் ...!!!
இப்படிக்கு
அன்னை