சிறுமியின் மழை ஆசை ....!!!

கொட்டும் மழைதனில்
கையில் குடையின்றி
குதித்து ஆடி
குளித்திட ஆசை.....!!

வாட்டும் குளிரிலும்
போர்த்திக் கொள்ளாமல்
மின்விசிறி சுற்ற
சிலிர்த்திட ஆசை ....!!

சாரல் அடித்தாலும்
சாளரம் அடைக்காது
சில்லென்ற காற்றில்
சுகம்பெற ஆசை ....!!

மழை விட்டபோது
மரத்தடி சென்று
மரக்கிளை உலுக்கி
மீண்டும் நனையஆசை ...!!

மொட்டை மாடியில்
நீர்வழி அடைத்து
தேங்கிய நீரில்
நடனமிட ஆசை ....!!

மின்விளக்கின் ஒளியில்
மின்னிடும் துளிகளை
சரமாய்க் கோர்த்து
அணிந்திட ஆசை ....!!

வீதியில் ஓடும்
மாரித் தண்ணீரில்
காகிதக் கப்பல்
செய்துவிட ஆசை ....!!

உள்ளங் கையை
வெளியில் நீட்டி
துளிவிழுந்து தெறிக்கும்
அழகுரசிக்க ஆசை ...!!

மழைத் தண்ணீரை
தங்கைமீது தெளித்து
அடிக்க வருகையில்
ஓடிஒளிய ஆசை ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Sep-13, 8:03 am)
பார்வை : 679

மேலே