நெருஞ்சிமுள் குத்தும் வதை தாரகை

நண்பனே! நட்புப் பூவின்
நறுமணமே! உன்னை என்றும்
எண்ணியே கண்டிடும் ஆசையில்
இருவிழிகள் பூத்ததடா!
இன்றுநீ பொய்யாய் எனை
வெறுக்கலாம் உனைப் பிரிந்தே
சென்றவள் கவித்தாரகை இங்கே
சிந்தினேன் கண்ணீர் துளிகள்!

நீ நண்பன் என்றே நானும்
நெஞ்சிலே போட்ட விதை
நீ விலகிச் செல்லும் வேளை
நெருஞ்சிமுள் குத்தும் வதை
தீராதா என்றோ ஒருநாள்
தீக்கோபம் குறையும் காலம்
வாராதா என்றே ஏங்கி
வடிக்கின்றேன் கவிதை ஒன்றை!

ஓயாத கடலலைகள் போல
உன்னினைவு என்னில் மோத
காயங்கள் ரணங்கள் எல்லாம்
கடுமையாய் வலிகள் தருதே
மறுபடியும் வருவாய் என்று
மருந்துகள் எல்லாம் தவிர்த்து
மருகியே காத்திருந்தேன்
வருந்தியே காலம் தள்ளி!

பருவத்தால் வந்த காதல்
பாதியிலே கசந்து போகும்
ஒருதலை காதல் அதுவோ
உளத்தில் அடைந்து கிடக்கும்
இருஉடல் ஓருயிர் காதல்
இணைந்திடும் காமத்தோடு
மறுப்பேச்சிற் கிடமேயில்லை
மகத்தானதொன்றே நட்பு!

மனத்தாலே நேசித்தாலும்
மறுக்கின்றாய் காரணமென்ன
எனக்கினி நண்பன் என்று
எவருமே வாழ்வில் இல்லை
உனக்கென வருவார் பலபேர்
உன்னத நட்பைப் பாடி
கணக்கிலே என்னன்பை மிஞ்ச
கனவிலும் எவரும் இல்லை!!!

-தாரகை

எழுதியவர் : தாரகை (12-Sep-13, 10:40 am)
பார்வை : 344

மேலே