விடியலுக்காக......!

உருளும் இவ்வுலகை ஒற்றை விரலால்
சுற்றி விளையாடிட ஆசை தான்...
ஆனால்.....
கைகளற்ற நான் விரலுக்கு ஆசைப்படுவதன்
அர்த்தம் தான் என்ன......?

அறிவூட்ட வேண்டிய என் தந்தை
அறிவுடன் சேர்த்து வீரத்தையும் விளைத்துவிட்டு
போர்க்களத்திலே விதையென புதைந்து கிடக்கிறான்...

அன்பூட்ட வேண்டிய என் தாய் கண்ணகியோ காமக்கொடூரனின் கைகளில் தப்பி
காலனின் காலடி பற்றினாள்....

அரவணைக்க வேண்டிய அன்னை பூமி
அடித்து விரட்ட அண்டை நாட்டுக்குச்
சென்றேன் அகதி என்ற அடைமொழியுடன்....!

ஆசைக்குத் தான் எல்லை உண்டோ....?
இத்தனை சுமையிலும் புத்தகச் சுமைக்கு
ஆசை கொண்டது என் அடங்காத உள்ளம்.....

என்னைக் கண்டதும்
காகித நோட்டுகள் காந்தி முகம் கேட்கவே,
கனவுகளை காலடிகளாக்கி நகர்ந்தேன்...!

எனக்கும் புரியவில்லை
நானும் இப்பூவுலகில் ஓரினம் என்பது
ஆயினும்
பசி என்னும் கடன்காரன் தினம்
வந்து தொல்லை தரவே....

தனிமையைத் துணையாகக் கொண்டு
துணிவோடு காத்துக் கொண்டிருக்கிறேன்
நாளைய விடியலுக்காக............!!!!!

- எங்கிருந்தோ ஏங்கிக்
கொண்டிருக்கும் தமிழனின் குரல்.....

எழுதியவர் : -கௌரி (14-Sep-13, 10:50 pm)
பார்வை : 76

மேலே