பேரிழப்பும் அதற்கொப்பான கனவுகளும்!! [உண்மைக் கதை]

குறிப்பு; மனப்பயம் உள்ளவர்களும் குழந்தைகளும் படிக்க வேண்டாம்.

கனவுகளைப் பற்றிய ஆய்வில் நான் இறங்கவில்லை. உங்களிடமும் அதை விவாதிக்க வரவில்லை. கனவுகளால் விளையும் பின் விளைவுகளை ஒப்பிட்டுப் பாருங்கள் என்று சொல்லவும் எனக்கு விருப்பம் இல்லை. கனவுகளின் உணர்த்துதல்கள் நம் வாழ்வில் எத்தகைய தாக்கங்களை எல்லாம் ஏற்படுத்தி இருக்கக் கூடும் என்பதப் பற்றியும் கிளறிவிடவில்லை. கனவுகளைப் பற்றிய முற்றுப் பெறாத விவாதங்களைக் கேட்ட., இந்தக் கனவுகளால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை முடிவு செய்ய முடியாதவர்களின் கூட்டத்தில் நானும் ஒருவன்.

ஆனால், காலம் செய்த மாபெரும் கொடுமை என்னை சில நாட்களாக நடுநடுங்கச் செய்தது. என் பகற்பொழுதுகளையும்., என் இயல்பையும் அடியோடு சாய்த்தது, என்னை ஒடுங்க வைத்த கொடூரத் தன்மையை மறக்க முடியவில்லை. நம் நினைவுகளின் நிழலாகவும் மனச் சுமையின் பிரதிபலிப்பாகவும் பயத்தின் சுவடாகவும் நித்தம் நித்தம் வந்து போகிற கனவைப் பற்றிய சிந்தனை என்னிடமும் இருந்தது இல்லை. பிறர் சொன்ன கனவுகளை செவிமடுக்காமலும், அவர்கள் கண்ட கனவின் தாக்கங்களை உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லும்போது அதை லட்சியப்படுத்தாமலும் நானும் சென்று கொண்டிருந்தேன்.

இந்த வேளையில் கனவுகள் என்னிடமும் விளையாட ஆரம்பித்தது. எப்போதேனும் வரும் கனவுகள் சில நாட்களாகத் தீவிரமானது. எந்த நிகழ்விற்கான அறிகுறியினையும் உருப்படியாய் வெளிப்படுத்தாத கனவுகள் ஒரு கலக்கத்தை உருவாக்க ஆரம்பித்தது. கனவைப்பற்றி ஒரு கணமும் கவலைப்படாத என்னையும் கனவுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. ஒரு கனவையும் நினைவில் வைக்காதவனை வெளியில் சொல்லி மனச்சாந்தி தேடும் அளவிற்கு என்னை இந்தக் கனவுகள் ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. நான் நிலை குலைந்தேன். நிம்மதி இழந்தேன். எந்த இடத்திற்கும் எந்த இருட்டிலும் தனி ஆளாகவும் தைரியமாகவும் செல்லும் நான் பகலில் கூட பயப்பட்டேன். சில நாட்களாக மாலை ஆறு மணிக்கே வீடு செல்ல ஆரம்பித்தேன்.

மெல்ல மெல்ல தலை காட்ட ஆரம்பித்த கனவுகள் என்னையே துக்கத்திற்குள் தொலைக்க ஆரம்பித்தது. என் வீம்பும் என் வீரமும் சுக்கு நூறாய் உடைந்தது. சென்ற இரண்டு வாரங்களாக வந்த கனவுகளில் எனக்கு மரண பயத்தை ஏற்படுத்திய கனவுகளை என்னென்று சொல்ல...

6.9.2013 வியாழன் இரவு.
*************************************
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவர் என் வீட்டிற்கு வருகிறார். இறக்கும்போது அவருக்கு வயது நாற்பது இருக்கும். எனது பால்ய கால நண்பனின் தகப்பனார் அவர். பக்கத்து ஊர்க்காரர். அவருடைய குடும்பத்தாரோ அல்லது என் நண்பரோகூட இறந்துபோன அவரைப்பற்றி நினைத்திருக்க மாட்டார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், அப்போதிருந்த உருவத்தைவிட இன்னும் இளமையாகத் தெரிகிறார். வாட்டசாட்டமாக இருக்கிறார். வாலிப வயதில் அப்படி இருந்திருப்பாரோ என்னமோ. வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்திருக்கிறார். இவர் எல்லாம் எதற்காக கனவில் வந்தார் என்று என் தாயாரிடமும் மனைவியிடமும் சொல்லி வருத்தப்பட்டேன்.

7.9.2013 வெள்ளி இரவு
**********************************
வீட்டில் இரண்டு அகல் விளக்குகளை[[***]] ஏற்றி வைத்தேன். காற்றடிக்கவே ஒன்று அணைந்து விடுகிறது. அதைப் பற்ற வைக்க முயற்சி செய்கிறேன். மூன்று முறை முயற்சி செய்கிறேன். முடியாமல் போகவே சரி இருக்கட்டும் ஒன்றே எரியட்டும் என்று விட்டுவிடுகிறேன். ஒரு தீபம் மட்டும் எரிந்துகொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு திடீரென்று விழிப்பு ஏற்பட்டுவிட்டது. வெள்ளிமலை முருகன் கோயிலில் வெடிச்சத்தம் கேட்கும் உணர்வு ஏற்பட்டது. மழைக்காலம் ஆதலால் அதை இடி முழக்கம் என்று சமாதானம் செய்து கொண்டேன். மீண்டும் படுத்துக் கொண்டேன். ஆனாலும் உள்மனதிற்கு சம்மதமில்லை. உள்மனதானது அது வெடிச்சத்தம்தான் என்று சொல்லியது. மறுபடியும் பயம் கவ்வ படுத்துத் தூங்கி விட்டேன். அதே சமயம் என் தாய்க்கும் அந்த ஒலி கேட்டிருக்கிறது. [[ முருகன் கோயிலில் உலக அதிசயமான அந்தவெடிச்சத்தமானது அந்த மலையைச் சுற்றி எதோ ஒரு திசையில் ஒலிக்கும். இதைப்பற்றி ஒரு நாள் தனியாக விளக்கலாம். இங்கு இடம் போதாது.]]

8.9.2013 சனி இரவு
*****************************
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மீமிசல் என்ற ஊரில் இருந்து [[மீமிசல்- இந்த ஊர்ப்பெயரை சரியாக எழுதி இருக்கிறேனா?]] அப்துல் வஹாப் என்பவர் எங்கள் கிரமத்திற்கு பிழைப்புத் தேடி வருகிறார். தள்ளுவண்டியில் தையல் இயந்திரம் வைத்து துணி தைத்துக் கொடுப்பது அவருடைய தொழில். அவருக்கு நான் தான் முதலில் பழக்கமாகிறேன். பின்பு இந்த ஊர் பிடித்துப் போகவே குடும்பத்துடன் இங்கேயே தங்கி வாழ்ந்தார். பின்பு இடத் தரகர் தொழிலும் சேர்த்துப் பார்த்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கே சென்றுவிட்டார். பிறகு அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அன்று இரவு கனவில் வருகிறார். வந்தவர் என் வீட்டின் நிலவின் மேல் [[ நிலைப்படி. இதன் மேல் யாரும் கால் வைத்து நடப்பதில்லை {?} ]] நின்று கொண்டு என்னை பதற்றத்துடன் கூவி அழைக்கிறார்.
" ஏம்பா மூர்த்தி சென்னிமலைல ஒரு எழவாயிட்டுது உடனே போலாம் வாப்பா " என்று சொல்லி விட்டு மறைகிறார் அல்லது நிற்கிறார். இங்கேயும் ஒரு வினோதம். அவரும் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை. கூடவே ஒரு கைக்குட்டை. அப்துல் வஹாப்பும் கைக்குட்டையை எப்பொழுதும் கையில் அல்லது சட்டைக் காலரில் வைத்து இருப்பார்.

இந்தக் கனவுகள்தான் என்னை ஆட்டிவைத்த கனவுகளில் உருப்படியாய் தெளிவாய் நின்றவை. இந்தக் கனவுகளில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் மற்றவர்கள் சொல்வதுபோன்று தெளிவற்றோ இன்னதென்று விவரிக்க முடியாததாகவோ காட்சியளிக்கவில்லை. நாம் பகலில் எப்படி காட்சிகளை கண்ணுறுகிறோமோ அப்படியே எனக்கும் தென்பட்டன. அதைவிட இந்தக்கனவுகள் காணும் முன்னும் பின்னும் ஒரு பயமுறுத்தலும்., குழப்பமான அதிர்வலைகளும்., மூளைப்பகுதியில் ஒரு அழுத்தமும்., இதயத்தில் ஒரு பிசைவும் கொடுத்து வதைத்ததைத்தான் தாங்க முடிவதில்லை.

அதாவது, படுத்தால் தூக்கம் வந்து விடும். தூக்கம் வந்ததும் கனவும் உடனே புறப்பட்டு விடும். காலையில் கண் விழிக்கும் வரை அந்த மாய வதைப்புகள் தொடர்ந்து உருட்டும். குறிப்பிட்ட கனவு ஏதேனும் ஒன்று மட்டுமே தெளிவாய் மனதில் நிற்கும். அப்படி மனதில் நின்றவைதான் மேற்சொன்ன கனவுகளின் பதிவுகள்.

இந்த மாய அழுத்தத்தால் காலையில் புத்துணர்வுடன் எழ முடிவதில்லை. இரவு எவ்வளவு நேரம் கண் விழித்திருந்தாலும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பழக்கப்பட்டவன் ஏழு மணியானாலும் எழுந்திருக்க முடிவதில்லை. தலைப்பாரமும் அடித்துப்போட்டாற் போன்ற வலியும் தோன்றியது. வாகனத்தில் செல்லும்போது அச்ச உணர்வு தோன்றியது. நான் போகும்போது யாரோ நம் மீது மோதுவது போலவும்., குறுக்கே வந்து விழுவது போலவும்., நம் வண்டி முன்னால் செல்லும் வாகனத்தின் மீது மோதி விடுவது போலவும் ஒரு பயம் என் தைரியத்தையும் மீறித் தொற்றிக் கொண்டது பெரும் பிரச்சனையாக இருந்தது.

9.9.2013 திங்கட்கிழமை. விநாயகர் சதுர்த்தி தினம்.

காலை ஐந்து மணி
******************************
காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டேன். வெள்ளிமலை முருகன் கோயிலில் உறவினர் மகனின் திருமணத்திற்கு நானும் என் மனைவியும் செல்கிறோம். அங்கு என் சித்தப்பா மகளும் அவரது கணவரும் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு., முகூர்த்தம் முடிந்தவுடன் திரும்பிவிட்டோம். என் தங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் சில காலமாக கொஞ்சம் மன வருத்தம். வீட்டில் கொஞ்சம் பிரச்சனை. அதிகமாக வெளி இடங்களுக்கு ஒன்றாகப் போகாதவர்கள் இங்குதான் அன்று ஒன்றாக வந்திருக்கின்றனர். இந்தக் கோயிலில் தான் அவர்களுக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டு முடித்துவைக்கபட்டது.

காலை எட்டு மணி
********************************
அந்தத் திருமணத்தின் வரவேற்பு திருப்பூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடக்க இருப்பதில் கலந்து கொள்ள என் வீட்டில் இருந்து நானும் என் மனைவியும் இருசக்கர மோட்டார் வண்டியில் செல்கிறோம். பாதி வழியில்., ஒரு வேலையாக சென்று விட்டு என் மாப்பிள்ளை எங்களைக் கண்டு பேசிவிட்டு எங்களை முன்னால் அனுப்பி வைக்கிறார். அவர் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்.

காலை ஒன்பது மணி
*********************************
வரவேற்பு விழாவில் கலந்துவிட்டு நான் என் மனவியை மண்டபத்தில் இருக்கச் சொல்லிவிட்டு நான் எனது அலுவலகத்திற்கு வந்துவிடுகிறேன்.

காலை ஒன்பது பதினைந்து
*******************************************
விநாயகருக்காக எழுதிவைத்திருந்த ஒரு பாடலை தளத்தில் பதியலாம் என்று பார்க்கும்போது தளம் இணைப்புக் கிடைக்கவில்லை. அதை முக நூலில் பதிந்துவிட்டு நண்பர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

காலை பத்து ஐந்து
******************************
இப்பொழுது தளம் கிடைக்கிறது. பாடலை பதியலாம் என்று நினைக்கும்போது கைப்பேசி அழைப்பு ஒன்று வருகிறது.
"உன் மாப்பிள்ளை பேருந்தில் அடிபட்டுவிட்டார். உடனே புறப்படவும்" என்று.
நான் சுதாரிப்பதற்குள் மற்றுமொரு அழைப்பு...
"அவரின் இரு சக்கர வாகனத்தின்மீது மோதிய பேருந்தின் அடியில் மாட்டிக் கொண்டார்" என்று. புறப்படுவதற்குள் மீண்டும் அழைப்பு "ஆள் நசுங்கிக் கிடக்கிறார். முடிந்துவிட்டார்" என்று.

மண்டபத்தில் இருந்து சென்றவர் ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்திவிட்டு வண்டியை எடுக்கும்போது விபத்தில் சிக்கி உயிர் இழந்திருக்கிறார். இனித்துவண்டு கிடக்க நேரமில்லை என்று ஒரு வழியாய் மனதைத் திடப்படுத்திக் கொண்டு உடலை அடக்கம் செய்ய வேண்டிய வேலைகளைக் கவனித்தோம்.

[[***]] அந்த இரண்டு அகல் விளக்கின் கதை இது. நான் தான் இவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்தவன். என் தங்கைக்கு பலவிதத்திலும் உறுதுணையாய் இருந்தவன். நான் ஏற்றி வைத்த விளக்கு அல்லவோ அவர்களின் வாழ்க்கை.

இந்த நிகழ்வைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் அவருடைய மரணத்தை அறியவைக்கும் நோக்கத்தில் ஒருபோதும் இல்லை. அதற்கு முன்பு நடந்த அப சகுனங்களையும் தீய கனவுகளின் விபரீத கோலத்தையும் விளக்குவதற்குத்தான்.

இப்போது அத்தகைய கனவுகளும் இல்லை., என் மாப்பிள்ளையும் இல்லை. அந்தக் கனவுகளும் அதனால் வந்த விளைவுகளும்., என்னைச் சூழ்ந்த அதிர்ச்சியும் மட்டுமே எனக்குள் அகலாமல் தேங்கி நிற்கிறது.

எழுதியவர் : RATHINA (16-Sep-13, 1:25 pm)
பார்வை : 134

மேலே