மனைவிக்கு விண்ணப்பம்

அன்பால் எனை ஆளவந்த திருமகளே !
இன்சொல்லால் எம்மை வசீகரித்தாய் ...
புன்முறுவலுடன் பணி புரிந்தாய் ...
பின்தூங்கி முன் விழித்தாய் ....!!

அயர்வின்றி அடுக்களையில் வேலை செய்தாய் !
ஆளுக்கொரு விதமாய் சமைத்துக் கொடுத்தாய்!
அன்பாய் நம் பிள்ளைகளை அரவணைத்தாய் !
அருமையாய் என் தாய்தந்தை சேவித்தாய் ...!

ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினாலும்
அமைதிகாத்து என்னை நாண வைத்தாய் !
தப்பேதும் நடந்தால் தப்பாமல் தப்பைச்
சுட்டிக்காட்டித் தப்பினி நடவாது தடுத்தாய் !

துளிர்த்த வியர்வை துடைக்கவும் மறந்து
துரித கதியில் தேனியாய்ச் சுழன்றாய் ...!
துயர் வந்தபோது தோள் கொடுத்தாய் !
துலாக் கோலாய் நியாயம் காத்தாய் !

கோபத்திலும் நிதானமாய்ச் செயல் பட்டாய் !
சோகத்தையும் சுகமான சுமையாய்ச் சுமந்தாய் !
சோதனையைத் துணிந்து எதிர் கொண்டாய் !
வேதனையை வந்தவழி விரட்டி அடித்தாய் !

நீ சலித்து நான் பார்த்ததில்லை ...
நான் கேட்டு நீ மறுத்ததில்லை ...
நீ வேண்டும் இனிவரும் பிறவியும்.....
பொன்மகளே உன் சம்மதம் தருவாயா .....???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Sep-13, 5:05 pm)
பார்வை : 119

மேலே