என்னை சுற்றி ஆயிரம் முகங்கள்....!!

கண நொடியில் உயிர் போனாலும்
மின் கம்பியில் நடைப்பழகும்
சிட்டுக்குருவி..!!

மரத்தடி நிழலில் கைரேகை பார்த்து
வருங்காலம் கணிக்கும்
அதி மேதாவிகள்..!!

ஆசிரியரின் ஆள்காட்டி விரலசைவிற்கு
ஆட்டு மந்தையாகிவிட்ட
வருங்கால தூண்கள்
இல்லை இல்லை துகள்கள் ..!!

பிள்ளையின் பெயர் மறந்து
பெற்றோரின் நினைவிழந்து
பொருளாதார சிக்கலில் சிக்கி
சிகை நறைத்த தம்பதியர்..!!

களிப்புருவதே கடமையென
உல்லாசமாய் பயணிக்கும்
உறுதியில்லா கலியுக காதல் ஜோடி..!!

"தன் வாழ்க்கை தன் கையில்"
தவறாக புரிந்தனர் போலும்
சிகரெட் ஏந்திய சீமான்கள்..!!

நகைச்சுவை பொருளோ நங்கை இவர்க்கு?
நவயுக கௌரவர் முன்
பாரதப்போரின் பாஞ்சாலியாக பல பெண்கள்...!!

யானை கண்கொண்டு
யாரையும் கண்டும் காணாமல்
தெருமுனை தொந்தி கணபதி..!!

நிம்மதியின் அர்த்தம் அறியும் வரை
நம்மை விட்டு பிரிவதில்லை
தாயின் தோலில் உறங்கும் பிள்ளை..!!

பூவுலகமென நினைத்து
புகை உலகை ரசிக்க
எட்டிப்பார்க்கும் மழை..!!

சேற்றில் சிக்கிய நாய்க்குட்டியை
சேர்ந்து மீட்க போராடும்
மூன்று நாய்க்குட்டிகள்..!!

வறுமைக் கோட்டிற்கு வெளியே
வருந்தி யாசிக்கும்
தழுதழுத்த கிழவன்..!!

ஒரு கோப்பை தேநீருக்குள்
இறந்த கால நினைவுகளோடு பலர்
இறக்கப் போகும் கனவுகளோடு சிலர்..!!

முகவரி இல்லா முகங்களோடு
தலைமேல் தாங்கி வந்து
வராந்தாவில் விட்டு செல்லும்
குடை போல்
ஓரமாய் ஒழுகும்
நினைவுகளோடு நான்..!!

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (18-Sep-13, 4:53 pm)
பார்வை : 152

மேலே