+கண்ணுக்கு கண்ணான தோழியே!+

கண்ணுக்கு கண்ணான தோழியே!
கட்கண்டு சுவையுந்தன் தோழமையே!
கண்கொண்டு ரசிக்கின்ற காட்சியெல்லாம்
உன்கண்ணாலே நானின்று கண்டிடுவேன்!

மலைவாசம் எனைப்பார்க்க கூட்டிவந்தாய்!
மலைப்பாக இருக்குதடி உன்பாசம்!
இளஞ்சாரல் என்மேலே விழுகையிலே
களைப்பெல்லாம் பறந்தோடி போகுதடி!

வண்ணவண்ண பூக்களெல்லாம் பார்க்குறீயா?
வண்ணத்துப் பூச்சிக்கூட்டம் பார்க்குறீயா?
சின்னச்சின்ன அருவியெல்லாம் பார்க்குறீயா?
என்கன்னத்தில் குழிவிழுக பார்க்குறீயா?

உரசிச்செல்லும் மேகத்தை பார்க்குறீயா?
சரசமாடும் பறவைகளை பார்க்குறீயா?
பளபளக்கும் இயற்கைவளம் பார்க்குறீயா?
சலசலக்கும் நீரோடை பார்க்குறீயா?

குதித்தோடும் குரங்கினங்கள் பார்க்குறீயா?
தவ்விச்செல்லும் முயல்களையும் பார்க்குறீயா?
இசைமீட்டும் வண்டினங்கள் பார்க்குறீயா?
பாட்டுப்பாடும் குயிலவளை பார்க்குறீயா?

தழுவிச்செல்லும் காற்றவனை பார்க்குறீயா?
உருவமுண்டோ அவனுக்கும்நீ சொல்வாய்!
பருவம்வரை கூடவந்த உயிர்த்தோழி!
கர்வமுடன் அணைத்துக்கொள்வேன் உன்னைநானே!

இருவருமே பிறந்திருந்தோம் விழிகளின்றி
தருமன‌வன் தானம்செய்த விழிகளாலே
மறுபடியும் பிறந்துவிட்டாய் விழிகளோடு
உருஉருவாய் காண்கிறாயோ உலகத்தையே!

எனக்குமொரு தருமராசா பொறந்திருப்பான்!
கண்ணிரெண்டை தானம்செய்து வாழ்ந்திருப்பான்!
உன்னைப்போல கண்களாலே உலகைக்காண‌
கன்னியிவள் ஆவலோடு காத்திருப்பேன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Sep-13, 10:21 am)
பார்வை : 89

மேலே