குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)
![](https://eluthu.com/images/loading.gif)
குடும்பம் நாசமாய்ப் போனாலும்,
குடித்துக் குடித்து
நாட்டை வாழ வைக்கும்
நல்ல குடிமகன்களே...!!
சாகப் போவது தெரிந்தும்
சாயந்திர நேரம் வந்ததும்
சரக்கடிக்க துடிக்கும்
சரித்திர நாயகர்களே..!!
கை உதறினால் போதும்,
கையாலாகாமல்
கை கட்டி வாய்மூடி
கள்ளுக்கடை வரிசையில் நிற்கும்
கலாச்சார சிங்கங்களே..!!
மனைவியின் தாலி விற்று,
மகளின் எதிர்காலம் அழித்து,
மனித மிருகமாய் மாறும்
மிகச் சிறந்த மனிதர்களே..!!
மது குவளையில் மயங்கி
மதிகெட்டு போன பின்
மானம் தொலைத்து
மரியாதை தொலைத்து வாழும்
மாண்புமிகு பெரியோர்களே...!!
சுய சிந்தனை இல்லாமல்
குடித்துவிட்டு,
சுய நினைவின்றி
ஆடை களைந்து
தெருவில் கூத்தடிக்கும்
நிகழ்காலக் கோமாளிகளே..!!
ஒரு பாட்டில் சாராயத்திற்கு
ஓட்டுப் போட்டு
ஆண்டுகள் பல
அடிமையாய் கிடக்கும்
அறிவு ஜீவிகளே...!!
எங்கேயோ போய்கொண்டிருக்கும்
எம தர்மனை
குடித்துக் குடித்தே
வம்பிற்கு இழுக்கும்
விளங்காமல் போனவர்களே..!!
முட்டாள் மட்டுமே
முழுமுயற்சி செய்து
தன்னைத் தானே
தரம் தாழ்த்தி கொள்கிறான்..!!
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
குடித்துக் கொண்டே இருந்தால்
நின்று விடும் உன் மூச்சு...!!!