சொந்தமில்லா வாரிசுகள்
விடை தேடியே
வீழ்கிறது
எங்களின் கேள்வி நெம்புகோல்கள் ...!
வளர்த்த
வாரிசுகளின் விழிகள்
சொத்துக்களை மட்டுமே
மேய்ந்து சுகம் காணத்துடிக்கிறது .....!
உள்ளே
வெளியேவென
பாசத்தை தேடியே
அலைகிறது
எங்கள் கூன் முதுகுகள்.... !
பாட்டனும் முப்பாட்டனும்
விட்டுச்சென்ற
கொஞ்சம்
புஞ்சை நிலங்கள்
முதலிரண்டு மகள்களை
கரையேற்றியதிலேயே கரைந்து போயிற்று ....!
மூத்தவனை
பட்டணத்தில் படிக்க வைத்து
முதுகெலும்பை நிமிர்த்தியதில்
காணாமல் போயிற்று
எங்கள் கிராமத்து வீடும்
முப்பதாண்டு கால வியர்வைகளும் ....!
இளையவனை
மருத்துவனாக்கி மகிழ்ந்ததில்
ஒடிந்து போனது எங்கள் விலா எலும்புகள் ....!
இனி
மண்ணில் விழுவதற்கு
மீதமில்லை வியர்வைத்துளிகள்......!
மனைவிகளின்
பாச சிறையிலே
மயங்கிக்கிடக்கிறார்கள்
எங்கள் வாரிசுகள்................!
சொத்துக்களை
அடிதடியில் பிரித்து போல்
எங்களையும்
பிரிக்க வேண்டாமென
வாரிசுகளின்
செவிகளில் சங்கூதுங்கள் ...!
பெற்றோரின் பாரத்தை
மாதம் ஒருவர்
பகிர்ந்து கொள்வதாக
கூறு போட்டுக்கூவாதீர்
துடிக்கிறது எங்கள் தன்மானம் ....!
எங்கள் குடிசையை
மயானத்துக்கு அருகிலேயே
இடம் மாற்றிக்கொள்கிறோம் ...!
வெளியேரிய மூச்சுக்காற்று
உள் நுழைய மறுக்கையில்
கொல்லி வைக்க மட்டும்
ஓடி வர வேண்டாம்
எங்களுக்குள் கனன்று வெடிக்கும்
ஏக்க தீக்குழம்புகளே
வெந்து தணித்து விடும்
இந்த தன்மான பூத உடல்களை....!
கூரை மேல் சாதம் வைத்து
வருந்தி வருந்தி அழைக்காதீர்
வீணாகி விடும் உங்கள் நடிப்பு ....!
அவதாரம் பூசிய
வேசத்தை கலைக்காமல்
எங்கள் நிழலைத்தீண்டி
நீங்கள் சுட்டுக்கொள்ளாதீர்கள் .....!