"முத்தம்" (நீரோட்டகம்)
(மு.கு :- இக்கவிதையை வாய் விட்டு வாசிக்கவும்)
சிற்றிதழ் காண்கையில் சிந்தையில் சீக்கடி,
தேனிதழ் தீண்டையில் தேகத்தில் தீயடி,
நின்னிதழ் சேர்க்கையில் நின்றதென் நெஞ்சடி,
என்னிதழ் ஏக்கத்தில், எதிர்த்தல்தான் ஏனடி.
செங்கதிர் கண்களில் செய்கிறாய் லீலைகள்,
தன்னெழில் காட்டிநீ சென்றெதென் சாலைகள்,
நித்திரை நீக்கிநீ நீட்டினாய் காலைகள்,
என்னாசை தேக்கநீ நெய்கிறாய் காதைகள்.
நீரலைகள் நீந்தக்கண்டேன் நங்கைநின் கேசத்தில்,
கிள்ளைகளின் கீதங்கண்டேன் தையல்நின் நேசத்தில்,
எல்லையிலா ஏகாந்தங்கள் எழிலரசி தேசத்தில்,
எத்தனைதான் ஆனந்தங்கள் இளநகையின் ஆரத்தில்.
என்னைநான் இழக்கின்றேன், இதழணைக்க இறக்கின்றேன்,
எண்ணத்தில் எரிகின்றேன், கன்னத்தில் சரிகின்றேன்,
அழகிடையை அணைக்கின்றேன், தேனள்ள நினைக்கின்றேன்,
ஏனிந்த நிலையென்கிறாய், இயற்றியதை நிறையென்கிறாய்.
நிறைக்கின்றேன்-
அழகிய நெற்றி, ஈடில்லா ஏர்,
அஞ்சனக் கண்கள், இறையின் தேர்.
கனியென சிற்றிடை, இசையின் நேர்.
இனியில்லை நிறைக்க, இதழ்கள் சேர்.
---------------------------------------------------------------
பி.கு : "நீரோட்டகம்" - உதடுகள் ஒட்டாத, குவியாத பாடல் வகை. ப்,ம்,வ் ஆகிய மெய்யழுத்துக்களும், அதைச்சார்ந்த எழுத்துக்களும் வராதிருந்தால் உதடுகள் ஒட்டாது. உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய உயிரெழுத்துக்களும் , அதைச் சார்ந்த எழுத்துக்களும் வராதிருந்தால் உதடுகள் குவியாது. ஆக, தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் , 119 எழுத்துக்களை உபயோகிக்காமல் எழுதினால், நீரோட்டகம் அமையும்.
------------------------------------------------------------------