பாவலனல்ல பாமரன்
புரட்சிக் கவியா
உணர்ச்சிக் கவியா
புகழ்ச்சிக் கவியா
வெறும்
எழுத்துக் கவியா
கேள்விகள் பல
என்னுள்ளே அடுக்கடுக்காய்...!
முடிவிலியாய் நீளும்
நீண்ட விவாதங்களின்
பின்னணியில்
கடந்துசெல்வது என்னவோ
நேரம் மட்டும்தான்........!
`எப்ப பார்த்தாலும்
கவிதைதான் தஞ்சமென்று
கணனியில் தவள்கிறாயே
வேலைதேடுவதை மறந்துவிட்டு ..
இலக்கியமா சோறு போடுகிறது...!`
கணவரின் அதட்டலில்
திரும்பிப் பார்க்கிறேன்
சிந்தனை கலைந்தவளாய் ....!
ஓயாமல் அழுத குழந்தை
ஒருவித வன்மத்துடன்
கணணியை வெறித்துப் பார்க்கிறது
`என்னைவிட எழுத்தா
உனக்குப் பெரிது ` என்பதைப் போல...!
சத்தமின்றி
பணியாற்றுவதை விட்டுவிட்டு
நேரத்தை வீணாக்கி
ஓயாத சங்கடங்களை
விலைக்குவாங்கி
ஏனிந்த மனக் குடைச்சல்கள்
தேவையற்ற முரண்களுடன்...!
தேசியத்தை எழுச்சிகொண்டு
வீரமுடன் பாடிய பாவலன்
விலாசமின்றிப் போன
வரலாறு தெரிந்தும்
துப்பாக்கி முனைகளுக்குள்
வாழப் பழகியபின்
நுணலும் தன் வாயால்
கெட்டதுபோல் ஏனிந்த நிலை ..!
பாவலனும் வேண்டாம்
கவிஞனும் வேண்டாம்
பாமரனாய் இருந்து
முடிந்ததைச் செய்யும்
பணி போதும் .................
தெளிந்தது மனது
இதுவரை அனுபவித்த
காயங்களுடன்...............!!
----------------------------------------------------------------------
தோழி துர்க்கா