பெண்ணொருத்தி புலம்புகிறாள்..
நேற்று வரை நல்லாய் இருந்தாய் தோழி
இன்று மட்டும் உன்னில் மாற்றம் ஏனோ?
கேட்டவள் வேறு யாருமில்லை
பட்டு நொந்தவளின்
கிட்ட நெருங்கிய தோழியே!
நெருங்கிய தோழி மட்டுமா
விரும்பாத உறவுகளும் கேட்கவே
பட்டுக் கெட்டவளும்
விட்டுக் கொடுக்காது உரைக்கவே
உள்ளத்தின் இருப்பு வெளிப்பட்டதே!
கேட்பவர் கேட்டு முறைக்க
பார்ப்பவர் பார்த்து விழிக்க
நொந்த உள்ளத்து எண்ணங்கள்
சொந்த முகத்தில் வெளிப்பட
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
காதல் பண்ணி முற்றி விட
தாலி கட்ட நாள் பார்க்கையிலே
தன் மனையாளைக் கேட்கணுமென்று
தாலி அறுப்பான் நழுவிவிட
"நானென்ன செய்வேன்" என்று
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
மணமுடிக்கிற நேரம் பார்த்து
மனைவி இருக்கிற செய்தி சொல்லும்
காதலர்களை நம்பி
ஏமாந்தவருக்குத் தான் தெரியும்
"என் நிலைமை" என்று
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
கேட்பாரும் பார்ப்பாரும் நோக்குவாரும்
பட்டு நொந்தவளின் உள்ளத்தை நோகடிக்க
ஊமையாய் உறங்கிக் கிடந்த
உள்ளப் புண் வலிக்க
கிள்ளித் தன் துயரை விரித்து
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
"யாரைத் தான் நம்புவதோ - இந்த
பேதை நெஞ்சம்
அம்மம்மா - இந்த
பூமியில் எல்லாம்
வஞ்சம் வஞ்சம்" என்று
சுசிலா அம்மா பாடிய
பாட்டடிகளை அசைபோட்டு
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
நல்ல நட்பாய்ப் பழகி
நல்ல பயனும் பெற்று
நல்ல நேரம் பார்த்து
நட்பை நறுக்கி வெட்டும்
எந்த நண்பரை விடவும்
காதல் பண்ணிப் போட்டு
வயிற்றை நிரப்பிப் போட்டு
தாலி கட்டும் வேளை
மனைவி இடைஞ்சல் என்று
வெட்டிச் சென்றவன் நஞ்சனென
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
பள்ளிக் காதல்
படலை வரைக்கும் என்றால்
அறிவு வளர்ந்த அகவையிலே
அரும்பும் காதலுக்கு
மனைவி (கணவன்) இடைஞ்சல்
சீர், கொடுப்பனவு (சீதனம், ஆதனம்) இடைஞ்சல்
இப்படி எத்தனையோ இடைஞ்சல் வருமென
அப்பவே அறிந்திருந்தால்
அப்பன், ஆத்தாள் சுட்டியவருக்கு
"தலையை நீட்டியிருப்பேன்" என்று
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
எல்லாம் போச்சு எல்லாம் போச்சென்று
தனிக்கட்டையாய் இருந்திடலாம் என்றால்
பணியகத்தில்
முதலாளி தொல்லை எல்லை மீறுது
பேரூந்துகளில்
காளைகளின் வேலை துன்பம் தருது
நடு வழிக்கு வந்து விட்டால்
"உந்தச் சனியனுக்கு
எந்த மாடு சரிப்பட்டு வரும்" என்று
ஆளாளுக்குள் முணுமுணுப்பது
காதுக்கு எட்டுவதும் நீளுது
பெண் உள்ளத்தைப் புரிய யாருளரென
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
பாழாய்ப் போன
குமுகாயம் (சமூகம்) என்றும்
பெண்களைச் சுட்டெரிக்கிறதே தவிர
மலை போல வளர்ந்து
உலையில வேக உழைப்போரென
ஆண்களைத் தூக்கி வைச்சு
கொஞ்சுவது தொடரும் வரை - இந்த
பெண்களுக்கு எப்பதான் விடியுமென
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
பெண்களுக்குச் சமவுரிமை என்பதெல்லாம்
பேச்சளவில் தான் உலாவுவதைக் காணும்
பணியகங்களிலும் பேரூந்துகளிலும்
பொடிப் பயலுகள் தொல்லை தொடருதே...
உருளும் உலகும் நாளும் முன்னேற
நம்மாளுகளின் அறிவும் வளர்ந்தாலும்
பழம் சீலை கிழிஞ்சது போல
மாமி, மாமன் புறுபுறுப்பதும் தொடருதே...
கழுத்தில தாலியை மாட்டியவள்
தூக்குக் கயிற்றில தொங்குமாப் போல
நாளுக்கு நாள் துன்புறுவதும் தொடருதென
பெண்ணொருத்தி புலம்புகிறாள்!
மாற்றம் என்னவென்று கேட்டவளே
கவலைப்படாதே தோழி (சகோதரி)
அந்த, இந்த, உந்த எல்லாம்
முடிந்து போன ஒன்றென
விடிந்தால் வெளுப்பது வானம் போல
இடிந்து போய்விடாமல்
முயன்றால் முடியாதது ஏதுமில்லையென
நல்லதே நடக்குமென நடைபோடென்று
ஈற்றில் ஆற்றுப்படுத்துகை செய்தாளே!
நொந்தவளின் நெருங்கிய தோழியே
கவலைப்படாதே தோழி (சகோதரி)
வந்த துன்பம் ஓடி மறைந்திட
எந்த வரவும் நன்மைக்கென்றிரு
நழுவுவதும் ஒதுங்குவதும் நல்வழியே
முழுத் துயரும் உள்ளத்திலிருக்க
வெந்து வெந்து நோகத்தானே முடியும்
முந்திய உள்ளப் பதிவுகளை இறக்கியதால்
உள்ளத்தில் அமைதியைப் பேணலாமென
ஈற்றில் ஆற்றுப்படுத்துகை செய்தாளே!
மாற்றம் என்னவென்று கேட்டவளே
நொந்தவளின் நெருங்கிய தோழியே
கவலைப்படாதே தோழி (சகோதரி)
பெண்கள் சாகப் பிறந்தவர்களல்ல
கண்ணே வாழப் பிறந்தவர்களே...
பாரதி பாட்டில் வரும்
புதுமைப் பெண்ணென வாழ்ந்து காட்டு
எதுகை, மோனை, சிலேடையில்
பழித்தும் நெழித்தும் நையாண்டி பண்ணியோர்
குதிக்கால் தலைதெறிக்க ஓட்டம் பிடிப்பரென
ஈற்றில் ஆற்றுப்படுத்துகை செய்தாளே!

