`வாழ்வும் பேறும்`இது கவியல்ல

விருந்தோம்பலை
விரும்பாத கணவன்
விருந்தோம்பலை
வாழ்வின் பேறாய்
நினைத்து வாழும்
உன்னத மனைவி..!

கணவன் அளித்த
மாங்கனிகளில்
இரண்டிலொன்றை
கணவர் அறியாது
சிவனடியாருக்கு வழங்கி
அதிலே பேரின்பம்கொண்டு..!

மதிய உணவுவேளையில்
மாங்கனியின் ஞாபகம்வர
`கொணர்வாய் கனியை`எனும்
கணவனின் உத்தரவுக்கிணங்கி
அழகாய்க் கனியை
வெட்டிக் கொடுத்து
அவன் உண்பதில் திருப்திகொண்டு..!

அதன் சுவையில் மயங்கி
மனைவிக்குக் கூட
மறுகனியையும் விட்டுவைக்காது
`கொணர்வாய் மறுகனியையும்`
எனும் உத்தரவில்
செய்வதறியாது விதிர்விதிர்த்து..!

உள்ளே சென்று
இறைவனைப் பணிந்து
அவனருளாலே மறுகனி பெற்று
அவனிடம் கொடுக்க
அதன் சுவையில் வியந்து
மிகவும் மகிழ்ந்து உண்டு......!

`முதல்க் கனியை விட
இதன் சுவை அமுதினும் இனிதே
எங்கு பெற்றாய் இதனை நீ..!?`
எனும் சந்தேகக் கேள்வியில்
உள்ளம் உடைந்து
உண்மையை உரைத்திட......!

அதனை நம்ப மறுத்து
நம்பிக்கையிழந்தவனாய்
`உண்மையென்றால் இன்னொருகனி
பெற்று வா` எனும் ஏவலில்
உள்ளே சென்று இறையருளாலே
மறுகனி பெற்றுவர
வியந்து பின் பயந்து
தெய்வப் பெண்ணென
அவளை விட்டு விலகி.....!

மீண்டும் இணைந்து வாழ
கணவன் மறுத்ததால்
இறுதியில் இல்லற வாழ்வை
இனிதே துறந்து
மானிட உருவொழித்து
பேய் வடிவம்தனை விரும்பி
வரமாய் இறைவனிடம் பெற்று...!

இறைவனே கதியென்று
அவனின் நடனத்தில்
எல்லையில்லா பேரின்பமுற்று
பரமனின் அருகாமையை
வாழ்வின் பேரின்பமென்று
தலையால் கைலைக்கு
நடந்து சென்று `வாழ்ந்தவர்`
சைவம் வளர்த்த - நம்
காரைக்கால் அம்மையார்...!!
-----------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (26-Sep-13, 5:44 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 69

மேலே