​மனங்களை திறப்பீர் ​மகளிர்

கருமேகங்கள் சூழ்ந்திட கழனியெலாம் குளிர்ந்திட
கருமேனிக் காளையவன் ​கலக்கமுடன் சென்றான் !
எதிரில் வந்த மனிதர்களிடம் ஏக்கமுடன் கேட்டான்
என்மனைவி வருவாளா என்கவலையும் தீருமாஎன

புரியாதவர் பலரும் அறியாதவர்போல சென்றனர்
புரிந்திட விரும்பியோர் அவனிடம் நெருங்கினர் !
வினாக்குறியாய் நின்றவனை வியப்புடன் வினவினர்
விவரங்கள் அறிந்திட அடுக்கினர் கேள்விகளை !

செப்பினான் அவனும் சோகமுடன் அவன்கதையை
செறிவுடன் சொன்னான் துயருடன் தன்னிலையை
செந்நிற மனைவி எனக்கு சென்ற வாரம் திருமணம்
சென்றாள் நேற்றிரவு செல்லுமிடம் சொல்லாமல் !

காரணத்தை கேட்டனர் கூடியிருந்த அனைவரும்
காரசார விவாதமா கருத்தில் வேறுபாடா என்றனர் !
கருத்தவன் என்பதால் வெறுத்திட்டாள் என்னை
கண்ணிலே இருந்தவள் கலங்கிட வைத்தாள் !

மனதிற்கு பிடிக்காமல் மணமாலை ஏன் சூடினாள்
மாங்கல்யம் ஏற்கும்வரை மௌனம் ஏன் காத்தாள் !
முதிர்ந்தவர் அதிர்ந்தபடி அடுக்கினார் கேள்வியை
முனகினான் அவனும் கட்டாய கல்யாணமென்று !

தேற்றினர் பலரும் தேம்பி அழுதவனை
தேடி வருவாள் அவளும் திரும்பியென !
நிறமல்ல முக்கியம் நிலையிலா வாழ்வில்
நிலையான அன்பே நீட்டிக்கும் இன்பத்தை !

நீரில்லா குளத்தில் நீந்திடவே முடியாது
சம்மதம் இல்லாத மணமும் சரிவராது !
பாவைகளே சிந்திப்பீர் பாதை மாறாதீர்
மனங்களை திறப்பீர் பெற்றவரிடம் பகிர்வீர் !

செறிவு = அடக்கம்

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Sep-13, 7:39 pm)
பார்வை : 85

மேலே