நூலறுந்த பட்டங்கள்...!

அடித்த மணியோசையும், தபால்காரரும்.... கொடுத்த சந்தோசம்,
தற்காலிக ஆறுதலாய்... வாசித்து முடிக்கும் வரைக்கும்தான்!
அதன்பின்னர்தான்.... தபால்காரரின் புன்னகைகூட,
உண்மையான புரிதலென்று புரிந்தது!

'என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு...
இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!!
என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா?
வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!!

எத்தனை நாளைக்கு நானிருப்பன்... எனக்கே தெரியாது!
ஆனாலுன் அக்கா தங்கச்சி பிள்ளைகள் ... அவங்களின் வாரிசுகள்,
எல்லாமே இங்குதான் சீவிக்குங்கள்... சிந்தியுங்கள்!'
"தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து...
இறுதி வார்த்தைகள்!!!

உன் அப்பா கட்டிய.... எங்கள் வீட்டை வித்துப்போட்டு,
விமானமேறச் சொன்னது.... உனக்கு பாசமாகத் தெரியலாம்!
"முடியாது".... என்று சொன்னதன் பின்னால், பேசாமல் போனியே ராசா!
பாசமென்பதும் காசுக் கணக்குத்தானோ....???

இன்னும் ஒலிக்காத அழைப்போசைகளுக்காக...காத்துக்கிடக்கும்,
ஆசையாய் வாங்கித்தொலைத்த 'கையளவு' பேச்சாளரும்,
வாசல்வந்து மணியடிக்காத தபால்காரரும்.....என் மனவெதும்பல்களில்,
ஊமையாய்... அடங்கிப்போகின்றார்!

சில ஆயிரம் மைல்தூரம் என்பது...
பல்லாயிரம் மாற்றங்களை........ மனித மனதினினுளும்,
ஆழமாய்த்தான் விதைத்து விடுகின்றதோ...???
புலம்பெயர்ந்தபோதே.... உறவுகளும் பெயர்கின்றன போல!

'உறவுகள்' என்பது ... விடைதெரியாத விடுகதையாக,
தொடர்கதையாய் .... தொடரும் நிலையில் ஒருநாள்,
தொப்புள்கொடிகள் அறுந்துபோன... குழந்தைகளும் தாய்மாரும்,
எம் மண்ணிலும்... அநாதைகளாகக் கிடக்கலாம்!

எழுதியவர் : ஒருவன் கவிதை (29-Sep-13, 8:48 pm)
பார்வை : 85

மேலே