ஆத்தா வச்ச மீன்குழம்பு

ஆத்து வெள்ளத்துல
அணைபோட்டு பிடிச்ச மீனு
ஆசையா பிடிச்ச மீனு
அர உசுரு அயிர மீனு

மீச கெளுத்தி மீனு
மினுமினுக்கும் கெண்ட மீனு
கொழுத்த கொறவ மீனு
கருத்த விரால் மீனு

அடுப்பு சாம்பல் வச்சு
ஆஞ்சு வச்ச ஆத்து மீனு
அலையாம குலையாம
அலசி உலசி யெடுத்த மீனு

பழைய புளி பார்த்தெடுத்து
பக்குவமா கரைச்சு வச்சு
கொத்துமல்லி சேர்த்தெடுத்து
அம்மியில அரச்சு வச்சு

காரம் சாரம் குறையாம
கொதிக்க வச்ச மீன் குழம்பு
குழம்பு கொதிக்கயிலே
கூப்பிடுமே மீன் வாசம்

அக்கம் பக்கம் கேட்டிடுமே
அடி இன்னாடி மீன் குழம்பா ?
கேழ்வரகு கூழுக் கிண்டி
கூப்பிடுவா சாப்பிடத்தான்

முள்ள பிரித்தெடுத்து
மெல்ல சாப்பிடுன்னு
கொள்ளப் பிரியத்தோட
செல்லமா கேட்டுக்குவா

உள்நாக்கு உச்சுக் கொட்ட
உமிழ் நீரும் சுரந்து வரும்
அடி நாக்கு ஆசப் பட
நடு நாக்க நான் கடிச்சேன்

புரையேறி போகையிலே
பதறிடுவா தாயவதான்
யாரோ உன்ன நெனச்சிருக்க
புரையேறி போனதுன்னு

தலையத் தான் தவிலாக்கி
தட்டித்தான் விட்டுடுவா
தண்ணீரும் தந்து தானே
தாகத்த தணித்திடுவா

கடல் தாண்டிப் போனாலும்
கிடைக்காத மீன்குழம்பு - நான்
ஆசவச்ச மீன்குழம்பு - அது என்
ஆத்தா வச்ச மீன்குழம்பு

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

எழுதியவர் : அழகர்சாமி சுப்பிரமணியன் (1-Oct-13, 10:24 am)
பார்வை : 1138

மேலே