காணாமல் போனவன்
நடுநிசிப் பொழுதொன்றில்
விழிகள் மூடிக்கொண்டாலும்
மனசு உறங்குவதாயில்லை.
தொலைவில் ஓர் அசரீரி
முனங்குவதும் பின் அலறுவதுமாய்
நிச்சயமாய் அந்த அழுகுரல்
ஓர் ஆண்மகனுடையதாய்தான் இருக்கவேண்டும்
என்னால் நன்றாகவே ஊகிக்க முடிகிறது
பீதி ஆட்கொள்ளும் தருணம்
அது என்றாலும்
ஆவது ஆகட்டும் என்று
கதவுதிறந்து பார்கின்றேன்
அங்கே
முழந்தாளிட்டு
கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டிருக்கிறது
ஆடைகளை காணவுமில்லை
தலையில் துப்பாக்கிச்சூடுபட்டு இறந்தவன்போலும்
மூளை முழுவதும்
வெளித்தள்ளி கிடக்கிறது
இளம் இரத்தம் என்பதால்
ஈரம் காய்ந்திடவுமில்லை .
பிள்ளைக்கு கொடுப்பதற்காய்
அவன் ஆசை ஆசையாய் வாங்கிய கரடிபொம்மை ஒன்றை
வாயில் கவ்வுவதும்
பின்
கீழே போடுவதுமாய் நிற்கிறது
நாய் ஒன்று .
சற்றேநெருங்கி அவன்
முகம் பார்கின்றேன்
ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை
அவன் நெற்றியில்
பெரிதாய் எழுதப்பட்டிருக்கிறது
இவன்
காணாமல் போனவன் என்று ...