பிரிவும் ஆரோக்கியமே !
பிரிவும் ஆரோக்கியமே !
-----------------------------------------
குமரிக் கோட்டம் ,
என் வாழ்வின்
குமுறல் காண்டம் !
இது விழி நீர்
அடை மழை ,
விளக்க
அடை மொழிக்கும்
தடை மலை !
குளியலில் அழுவது
தானா என் வாழ்க்கை ?
அதில் குளிர்காய நினைப்பது
தானா உன் வேட்கை ?
உன் நா உஷ்ணம் உண்டேன்
இன்னா என அறிந்திருந்தும்
என்னால் கஷ்டம் வேண்டாம்
இந்நாள் முதல் பிரிந்திருப்போம் .
முதல் புள்ளி இட்டவள் நீயே
முற்றுப்புள்ளியும் இட்டுச் செல்வாய்
உன்னுள் கொண்ட என் சரிதம்
இங்கேயே விட்டுச் செல்வாய் !
கண்டுகொள்ளாமல் சென்றவள்
நீ ஒன்றைக்கோள் - உன்
நினைவெனக்கு வரமுமில்லை..
இழப்பு எனக்கு சாபமுமில்லை !
"நீ தரணி ஆளப் பிறந்தவன்" இது
சோர்வுற்ற எனக்கு தாயின் சோர்
ஊட்டும் மந்திரம் ...
"பெண்ணால் கெட்டவன் நானில்லை"
இதுவே இனி என் மூல மந்திரம் !
உன் பலி கொண்டவன் நான்
எனினும் - உன்னை பலிகொள்ள
நினைத்ததும் இல்லை
இழி சொல்ல ஏற்றதுமில்லை !
ஜனரஞ்சகம் மட்டும் வாழ்க்கையில்லை.
நவ நங்காய் இரு .. பிழையில்லை
நயவஞ்சகர் கை சிக்காதே
எனை போல் ஆகிடுவாய் தீக்கிறையாய்..
தேய்ந்திடுவாய் தேய் பிறையாய் !
இந்த வாழாவெட்டி
சொன்னவை செவியேற்று !
எதிர் காலத்தை
பைய மெருகேற்று !
உணர்வுகள் களைந்து
உறவுகளை நினைப்போம்
சேர்ந்தே பிரிவோம்
பிரிவும் ஆரோக்கியமே !
- நிஷான் சுந்தரராஜா -
02/10/2013