நீணிலமிழந்ததே நித்திலத் தலைவனை…

2-10-1976ல் எழுதப்பட்ட கவிதை இது. பெருந்தலைவர் காமராஜர் 2-10-1975ல் அமரரானபோது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்த அவரது பூதவுடலருகே பலமணிநேரம் அமர்ந்திருக்கும் பாக்கியம் கிடைத்தது. அதை நினைவுகூர்ந்து அடுத்த ஆண்டு அதேநாளில் நான் எழுதிய அஞ்சலிக் கவிதை. சுமார்37 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெளியிடப்படுகிறது.

நீணிலமிழந்ததே நித்திலத் தலைவனை…

தரணி யேற்றுந் தமிழர் நாட்டில்
கரும வீரர் பெயரைப் பெற்ற
கரிய வண்ணக் காந்தி யெங்கள்
விருது நகரின் காம ராஜே,

விண்ணில் நல்ல காந்தி நேரு
எண்ணில் நில்லாத் தலைவர் பல்லோர்
பண்ணி சைத்துப் பாடி யேற்கும்
கண்ணி யத்தின் கருவே யுருவே,

கண்ணீர்க் கடலில் காந்தி தொண்டர்
எண்ணி யேங்கும் ஏழை மக்கள்,
உன்னை யுள்ளும் மக்கள் உள்ளம்
சென்னை நகரில் சோக வெள்ளம்,

காந்தி பிறந்த நந்நாள் தன்னில்
காந்தி யாகிய காங்கிரஸ் காவல,
சாந்த உருவே சரித்திர நாயக
வேந்தன் உனக்குச் சாவு முண்டோ,

வேதனை யெமக்குத் தீரா தன்றோ
சோதனை வந்தது பாரோர்க் கன்றோ,
காலன் என்பவன் கருத்தழிந் தானோ
மேலாம் தலைவன் உயிர்பறித் தானே,

இறைவன் என்பவன் இவ்வுல குண்டோ
இருந்தால் தலைவனை யிழந்திருப் போமா,
தர்மம் என்பது தரணியி லுண்டோ
தங்கிடில் தலைவனை நாமிழப் போமா,

நீதி யென்பது நிலம்விடு சென்றதோ
நித்திலத் தலைவனை நீணில மிழந்ததே,
வேதம் வகுத்தவன் வேறுல கேற்றான்
பேதம் போக்கிட யாருளார் இறைவா,

மாதம் பொய்த்த மாரியும் வந்தது
மாண்டவன் இறையெனக் கண்ணீர் விட்டது,
ஆண்டவன் அமைதியில் ஆழ்துயில் கொண்டான்
ஆண்டவன் மேனியில் கதர்க்கொடி கண்டோர்

கடந்தவை மறந்து கதறித் துடித்தனர்
கட்சித் தொண்டர் காசினி மறந்தனர்,
நல்லவ ருடனே செல்லத் துடித்தனர்
நல்லா ரோடு பொல்லார் வந்தனர்

நாயக னுடலைப் பார்த்துச் சென்றனர்
நாட்டு மக்களும் நகரில் கூடினர்,
வாட்டு துயரில் வாய்திறந் தழுதனர்
நாட்டுக் குழைத்த நாயகன் எங்கே,

ஏட்டுக் கல்வி தந்தவன் எங்கே
ஏழைக் குணவும் தந்தவன் எங்கே,
எங்கள் தெய்வம் எங்கே எங்கே
எங்கும் பேரொலி, பொங்கும் எதிரொலி,

ஏழைத் தலைவனின் இதழில் முறுவல்
என்று மெழுந்திடா இன்பத் தூக்கம்,
நின்றழு மக்களின் நெஞ்செலாம் ஏக்கம்
நீதியைக் காத்தவன் நித்திரை கொண்டான்,

வீதியில் கண்டோர் விம்மி யழுதனர்
விண்ணோர் மழையாய்க் கண்ணீர் சிந்தினர்,
எண்ணிலா மக்கள் ஏங்கித் துடித்தனர்
ஏந்தலின் மேனியை எரியும் ஏற்றதே,

சாந்தப் புன்னகை சரித்திர மானதே
வேந்தன் அவனை என்றினிக் காண்போம்
வேதக் குரலை என்றினிக் கேட்போம்
வேதனை தன்னை என்றுநாம் மறப்போம்,

சாதனை செய்தவன், சரித்திரம் படைத்தவன்
போதனை மறவோம், புதுவுல கமைப்போம்,
வேதனை தீர்த்தவன் வகுத்தநல் வழியை
வேதமாய்க் கொள்வோம், வெற்றியும் பெறுவோம்…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Oct-13, 2:32 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே