மரபில் புதுக் கவிதை...வாசியுங்கள்..மரபுமாமணி எசக்கியெலுக்கு நனறி மொழிந்து..

தோழமைகளே ....வணக்கம்.

எனது பெயரன் தமிழன்பன் தருண் பாமாலை ஒன்று
தளத்தில் பதிந்தேன்...பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் படைப்பாக அப் பாமாலை உரு கொள்கிறது...

இந்நிலையில் மரபில் பாமாலை காண ஆசை கொண்டு நமது மரபு மாமணி காளியப்பன் எசக்கியேல் வசம் அளித்தேன்...எனது மூக்கில் முளைத்தன விரல்கள்..உச்சந்தலையில்
புருவங்கள் நெளியத் தொடங்கின.....இன்னமும் தான்..ஒரு நாள் இடைவெளியில் படைத்தளித்தார்...
கீழே அளித்துள்ளேன்...வாசித்து மகிழுங்கள்...

மரபு மா மணி வாழ்க..வாழ்க...

பெருக்கெடுத்தோடும் நன்றியோடும் ஆசை கைகுலுக்களோடும்...

அகன்

*******************

வணக்கம்மெனும் வாயால் வளரும் தமிழும்
சுணக்கமின்றிச் சொல்லிப் பழகு;

பூவுன் உறவு; புதுத்தமிழோ உன்,நினைவு;
நீவு விரல்களோ நேர்கலப்பை!- மேவும்
இலக்கியம் நின்வயலின் இன்பம் உனக்கும்
பலர்க்கும் கூடும் பயன்!

பறக்கும் கமலப்பூ! பார்மணக்கும் சாந்து!
சிறக்கும் தமிழ்மான்! சிந்தை –நிறைத்துத்
தவழுந்தே யாநிலவு! தளிர்த்தமலர்த் தேனோ
டுவக்கும் தமிழின்சொல் வீச்சு!

புத்தம் புதுப்பண்! புதுக்கவிதைச் சந்தம்;வே(று)
எத்தும் அழகில் எதிர்நிக்கா! – சத்தநதி
மேரோ டிமயம் மிகப்போமோ இந்நிலத்தே?
யாரோ இதைமறுப்பார் இங்கு?

செவ்வாய் இதழ்வழியும் செஞ்சாந்துப் பாகுநிலத்(து)
எவ்வாறு தேடி எவண்பெறவோ? – கைகால்
உதைத்துவிரல் சூப்பி ஒழுகுநீர் சொட்ட
வதைப்பதேன் கண்ணசைவை வைத்து!

மோனத் தவமிருந்து முக்திநிலை பெற்றோம்காண்!
ஆனந்தம் எம்முள் அளவின்றிப் பாயுதுகாண்!
கானக் குயிலோசை காதுகளில் கேட்குதுபார்!
வானக் கொடையா நீ வந்து!

வம்சம் தழைக்க வந்தோய்!நின்
==வாய்முத் தத்தைப் பெற்றவர்கள்
கம்சன் வலிக்கும் பீமனவன்
==கைசக் திக்கும் கலங்குவரோ?

புதுமலர்த் தேனைச் சுவையென்பார்;
==பொய்முக நிலவை அழகென்பார்!
மதுக்குடத் தமிழ்ந்து மயங்கியவர்
==மண்ணுல கமிழ்தம் அதுவென்பார்!


உருட்டிப் பார்க்கும் அவ்விழிகள்
==உடலில் காட்டும் அம்முறுக்கு
சிரிக்கும் அந்தப் பூவிதழ்கள்
==சிந்தும் எம்முள் களிப்பென்றால்,

குழறும் நாவும் உமிழ்நீரும்
==கொட்டும் மழலைத் தமிழ்ப்பாவோ?
கழியும் சிறுநீர் மனைசுத்தம்
==காணத் தெளிக்கும் நீராமோ?

எரிக்கும் வெயிலின் கொடுமையிலோ
==ஏந்திய தாய்கீழ் வைத்ததிலோ
தெறிக்க எழுமக் கதறலுமேன்?
==தேம்பி அடங்கி எழுமமைதி
இறுக்கி எடுத்த தாயாலோ!
==எங்கள் முன்னே நீகாட்டி
விரிக்கும் இந்த நாடகமும்
==விளக்கு தன்றோ நவரசமும்!

சன்ன விழிகள் நீதிறக்கச்
==சன்னல் எல்லாம் மூடுகிறோம்,
உன்னைப் பார்க்கும் நிலவுக்கும்
==உள்ளம் பொறுக்கா தென்பதனால்!

அன்ன மேயுன் மழலைநீர்
==ஆடித் திளைக்கும் ஆசையிலும்
சின்ன தாமுன் சீரடிகள்
==சேர்ந்தே உதைக்க வாங்கிடவும்
முன்ன தாகத் தம்முள்ளே
==முரண்டு பிடிக்கும் சொந்தங்கள்,
தன்னைச் சுருக்கிச் சூரியன்,உன்
==தயவுக் காக எழும்போதே!

ஒளிர்வான் நிலவோ மேகத்துள்
==ஒளிந்து நின்றே உனைப்பார்ப்பான்!
தளிர்ப்பூங் காவாம் உன்னுடலைத்
==தடவித் தென்றல் சுகம்காண்பான்!



வெளிவந் திடும்,உன் குரலாலே
==விளக்கம் பெறவே உலகத்தின்
மொழிகள் பலவும் காத்திருக்கும்!
==முன்பார் வைக்கே பூத்திருக்கும்!

பனிநீர் கண்ணில் பவளமடா!
==பத,நீர் உந்தன் மழலையடா!
இனிமேல் கன்னல் சாறதுவும்
==இனிக்கா துன்வாய் உமிழ்,நீர்முன்!
தனியுன் நிறத்தின் முன்னாலே
==தங்கம் கூடக் கருக்குமடா!
மனிதன் இலை,நான் பொம்மையடா
==மயக்குமே உந்தன் அழகுமடா!

எங்கள் வீட்டினுள் இருள்போச்சு!
==இரண்டாம் ஆதவன் நீயாச்சு!

* * * * * *

எழுதியவர் : காளியப்பன் எசக்கியேல் (3-Oct-13, 8:34 pm)
பார்வை : 164

மேலே