காத'லடி'
கன்னியவள் முத்தம்பெற வண்ணமாக்கி வைத்திருந்தேன்,
கன்னந்தேடி வந்ததுவுன் காலணியின் சுவடுகள்தாம்.
கண்ணியதுன் சொத்துதானே, எண்ணமதில் மலர்ந்திருந்தேன்,
அண்ணனவன் விட்டகுத்தில் பிரிந்ததுவோ உதடுகள்தாம்.
மலர்பாதம் உறைவீடென புகுவேன் உன்சரணடி,
குறையேதும் கூடாதென கொடுத்தாய் நல்மிதியடி,
உய்யாரம் என்காதினில், கலங்கிற்றோ என்பொறியடி,
உன்காதல் தனைவாங்கிட, மிதிதாங்குதல் விதியடி.
காதல்கொண்டு கடிதம் தருவேன் நிறைவாய்,
கோபங்கொண்டு கன்னம் வீங்க அறைவாய்,
வாங்கிகொண்டும் பின்னம் வருவேன் விரைவாய்,
வேகங்கொண்டு கொடுப்பாய் என்வாய் செவ்வாய்.
அழகில் அசத்தும் இரதியே உனக்கு,
அரிவாளும் கையுமாய் அடியாள் எதற்கு,
அரைக்கண் பார்வை போதுமடி எனக்கு
அக்கணமே உயிர் விடுவேனடி அதற்கு.