கிராமத்துக் கிளிகள் !

[1] அவன் கேள்விகள் அவள் பதில்கள்
*****************************************************

அவன்; வரப்பு மேட்டில நடந்து போறவளே வழிக்குத் துணையா நானும் வரலாமா

அவள்; அசட்டுத் தனமா தொடர்ந்து வாரவரே
பொழப்ப மறந்து வீணாச் சுத்தலாமா
***********

அவன்; கரும்பு வயலில் மறஞ்சு சிரிப்பவளே
இனிப்பக் கொஞ்சம் எனக்குத் தருவாயா

அவள்; வசியம் செய்யும் பேச்சு எதுக்காக
வஞ்சிக் கொடிய கவுத்து விடத்தானா
**************

அவன்; மொறச்சுப் பாத்து வெலகி நடக்காதே
சிரிச்சாக் கொஞ்சம் முத்தும் உதுராதே

அவள்; கொழஞ்சு கொழஞ்சு நைசா பேசுறயே
கொமுரிப் பொண்ணு வழிக்கு வருவாளா
************

அவன்; அப்பன் எனக்கு பொண்ணுத் தேடறானே
அப்புசி மாசம் முடுச்சி விடுவானே

அவள்; தங்கக் கட்டி கனக்கா இருக்கேனே
நமக்கு இங்கே ஜோடி சரிவருமா
***********

அவன்; பத்துப் பொருத்தம் இருக்கு என்றானே
குடும்ப ஜோசியன் சொன்னா பலிக்குமே

அவள்; எண்ணைச் சட்டி நெறமா நிப்பவரே
வெண்ணைக் கட்டி உனக்குக் கெடைப்பாளா
**********


அவன்; தோட்டம் தொறவு நெறஞ்சு கெடந்தாலும்
வாட்டம் ஒன்னும் நெஞ்சில நிக்குதடி

அவள்; வாட்ட சாட்டப் பொண்ணு நாவந்தா
ஓட்டம் விடுமோ அந்தக் கொறை தானா

***********

அவன்; தவசம் கொட்டிக் குவிஞ்சு கெடந்தாலும்
அளந்து வைக்க ஆளும் இல்லையடி

அவள்; வயித்துப் புள்ள நழுவிப் போயிடுமே
வழிஞ்சு பேசும் கள்ளப் பேச்சாலே
**********

அவன்; உசுரக் குடுத்து உன்னப் பிடிப்பேனே
உருமப் பொண்ண விட்டு விடுவேனா

அவள்; எல்லாம் சரிதான் ஒன்னு சொல்வேனே
நல்லா நெனச்சு பதிலச் சொல்வாயே
**********


[2]. அவள் கேள்விகள் அவன் பதில்கள்
********************************************************


அவள்; இருக்கும் சொத்தை எழுதித் தருவாயா
அப்பன் ஆத்தா பேச்சை விடுவாயா

அவன்; நம்பித் தானே வாழ்வ நடத்தோனும்
தும்பிக் கையான் வரமும் கொடுப்பானே
**********

அவள்; புகுந்த வீட்டில் ராணியா ஆக்குவியோ
எவதான் கண்டா சாணிய அள்ளுவனோ

அவன்; அத்தை மகளே அடிமை நானல்லவோ
ஆயுசு வரையும் மார்பில் தாங்குவனே
***********

அவள்; பட்டிக் காட்டுப் பொழப்புப் புடிக்கலையே
டவுனுப் பக்கம் பங்களாப் பார்ப்பாயா

அவன்; சொந்தக் குடிசை சொர்க்கம் ஆகுமடி
பங்களா போனால் பணத்தை கரக்குமடி
*********

அவள்; வீட்டு வேலய செய்ய மாட்டேன்யா
பத்துப் பாத்திரம் தேய்க்க மாட்டேன்யா

அவன்; உழச்சுத் தின்னா ஒடம்பில் ஒட்டுமடி
ஓய்ஞ்சு கெடந்தா ஒடம்பு பெருக்குமடி
**********

அவள்; கூட்டிக் கொண்டு உலகம் சுத்துவாயா
ஊட்டி மலைய வாங்கித் தருவாயா

அவன்; எனக்கு ஒலகம் எப்பவும் நீதாண்டி
அன்பு மலையில் அழகு பார்ப்பேண்டி
*********

[ 3 ] அவன்
***************

நெஞ்சத் தொட்டு நெசாமாச் சொல்லடியே
உந்தன் மனசில நானும் இல்லையா
அழகை விட்டு அன்பை பாரடியே
சொந்தம் விடாம பந்தம் சேரடியே

[ 4.] அவள்
*****************

அசட்டு மாமனே அறியாத வெவரமே
உனக்கு நானெனும் எழுத்தும் அழியுமா
கொழந்தை உள்ளமே சத்தியம் செய்யட்டா
கழுத்த நீட்டுவேன் தாலியக் கட்டிக்கோ !!

***

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (7-Oct-13, 3:26 pm)
பார்வை : 263

மேலே