தேன் 50

எழுத்து வலைதளத்தில் பதிந்தேன்
அழகிய சொர்க்கத்தில் இணைந்தேன்
பழகும்நட்பால் இதயம் குளிர்ந்தேன்
குழவி போலும் குதூகலித்தேன் .....!!

தமிழ்த்தேன் பருகத் தவித்தேன்
அமிழ்தாய் அதிலே கரைந்தேன்
கவலை நானும் மறந்தேன்
கடமை சரிவர செய்தேன் ....!!

நற்படைப்புகள் பார்த்து வியந்தேன்
நற்கவிதையில் மனமும் லயித்தேன்
நற்கதையும் ரசித்து ருசித்தேன்
நகைச்சுவை படித்து சிரித்தேன் .....!!

நித்தம் கவிதைகள் படைத்தேன்
புத்தம் புதுக்கவி வாசித்தேன்
பித்தம் நானும் தெளிந்தேன்
சித்தம் எழுத்தென புரிந்தேன் ....!!

அன்பால் நட்புவட்டம் கவர்ந்தேன்
பண்பாய் நற்கருத்தும் அளித்தேன்
மற்றவர் கூற்றுக்கும்செவி மடுத்தேன்
கற்றவர் கற்பிக்க மகிழ்ந்தேன் .....!!

சொக்கும் சொல்லாடலில் விழுந்தேன்
சொர்க்கம் இதுவென மிதந்தேன்
சொந்தம் கிடைக்க நெகிழ்ந்தேன்
சொத்தே எழுத்தென உணர்ந்தேன் ....!!

மதம்கடந்த மனிதம் பார்த்தேன்
மனங்களின் சிறப்பில் பூரித்தேன்
அனேக உள்ளங்களில் புகுந்தேன்
சினேக உணர்வில் சிலிர்த்தேன் ....!!

ஈழத்தமிழன் நிலைபடிக்க நொந்தேன்
தோழமையுணர்வில் விழிநீர் வடித்தேன்
கடவுளிடம் கோரிக்கை விடுத்தேன்
நடக்கும்யாவும் நலமாக ஜெபித்தேன் ....!!

மலைத்தேன் போலும்தமிழை நினைத்தேன்
கலைத்தாயின் பாதாரவிந்தம் பணிந்தேன்
நிலையில்லா பிறவி எடுத்தேன்
சிலையாய் பீதியில் உறைந்தேன் .....!!

விமர்சனம் வந்தால் சிந்தித்தேன்
விமோசனம் பெறவே விழைந்தேன்
வழிமுறை கேட்டு அறிந்தேன்
வாழிய எழுத்தெனப் புகழ்ந்தேன் .....!!

கற்பனைவானில் சிறகடித்துப் பறந்தேன்
கற்பகத்தருவாய் கருத்தும் பகிர்ந்தேன்
அற்புதப்படைப்பில் என்னையே மறந்தேன்
பற்பலபுதுமை உலாவர பரவசித்தேன் ....!!

ஆற்றின் வெள்ளமாய் புகுந்தேன்
ஊற்றெடுத்த எண்ணத்தைப் பதித்தேன்
ஏற்றமிகு எழுத்தில்மனம் தொலைத்தேன்
கூற்றன்கூப்பிடுமுன் சாதிக்கவே வந்தேன் .......!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Oct-13, 9:00 pm)
பார்வை : 178

மேலே