"காதலாகினேன்"

உம்மென்று ஒப்புதல் சொல்லி
உலகம் சமைத்து போனாயடி,
ஓரப்பார்வை குறும்பாய் பார்த்து
உயிரைக் கொளுத்தி போனாயடி,
இறகைத் தொலைத்த பறவை நானே - உன்
இதய தேசத்தில் ஊதலாகினேன்.
இத்தனை வருட தவத்தை துறந்தே - உன்
இதழின் வரியில் காதலாகினேன்.

வர்ணக்கிளியே, வாய் வார்த்தையாலே
வதைத்தென் உயிரை கொல்லாதேடி,
அன்னக்கொடியே, சிறு அதரத்தாலே
ஆசைக்கணை விடுத்து செல்லாதேடி.
கண்ணீர் வறண்ட காளை நானே - உன்
கயல்விழி தன்னில் கருமையாகினேன்,
கனவாய்ப் போன இளமை உயிர்த்தே - உன்
காலடி படவே காதலாகினேன்.

மின்னல் மொழியே, உன் வானத்தினிலே
மிதக்கும் மேகமாய் மாறிவிட்டேன்.
ஒளிர்க்கரம் எந்தன் தேகம் துளைக்க,
உள்ளம் மழையாய் தூறிவிட்டேன்.
உணர்ச்சி மறந்த பாறை நானே- உன்
உளிவிரல் தீண்ட சிற்பமாகினேன்.
உதயம் காணா கிழக்கும் நானே - உன்
உயிரொளி பரவ காதலாகினேன்.

வட்ட நிலவை சற்று வெட்டி
வார்த்து வைத்தேன் நெற்றி சுட்டி,
மொட்டு மலரை சேர்த்து கட்டி
சூட்டி விட்டேன் கூந்தல் ஏற்றி.
சித்தினி விழிகள், சிந்திய ஒளியில்,
சுட்டியும் நாண, வெட்கித் தேய,
சிற்றலை கேசத்தில், வீசிடும் வாசத்தில்,
மலரது வியக்க, இதழ்களை விரிக்க,
மயிர்க் கூச்செறிக்கும் கூதலாகினேன்,
மதியது மயங்க காதலாகினேன்.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (10-Oct-13, 2:10 pm)
பார்வை : 293

மேலே